திருடி திருடி ₹4.5 கோடி மதிப்பில் நூற்பாலை வாங்கிய கொள்ளையன்.. கோவையை கலங்கடித்த ”ராடுமேன் மூர்த்தி”!!

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2024, 7:26 pm

கொள்ளையடித்த பணம், பொருட்களை வைத்து கொள்ளையன் ₹4.5 கோடி மதிப்பில் நூற்பாலை வாங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகரில் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி வடக்கு காவல் துணை ஆணையாளர் மருத்துவர் இரா.ஸ்டாலின், தலைமையில் காவல் ஆய்வாளர் வினோத்குமார், சார்பு ஆய்வாளர்கள் கார்த்திகேயன், பார்வதி, சிறப்பு சார்பு ஆய்வாளர் அன்பழகன், தலைமைக் காவலர்கள் கதிர்வேல், பார்த்திபன், பாலபிரகாஷ், பிரகாஷ், ரவி, குருசாமி. ஆனந்தன் அடங்கிய தனிப்படையினரின் 3 மாதங்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தனிப்படை காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடி கோவை, திருப்பூர். திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு சென்று அறிவியல் தடையங்களைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டதில் திருட்டு வழக்குகளில் மூளையாக செயல்பட்ட மூர்த்தி மற்றும் ஹம்சராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூர்த்தி என்பவர் ராட்மேன் (Rodman) என தெரியவந்தது. இவர் தனியாக திருட செல்லும் போது முகத்தை முழூவதுமாக மறைத்துக் கொண்டும், முழுக்கை சட்டை அணிந்தும் ரயில்வே டிராக் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பூட்டி இருக்கும் வீட்டினை நோட்டமிட்டு இரும்பு கம்பியை பயன்படுத்தி பூட்டினை உடைத்து உள்ளே கொள்ளை அடிப்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் கோவை மாநகரில் 14 திருட்டு வழக்குகளிலும், 4 வழிபறி, கூட்டுக் கொள்ளை வழக்குகளிலும் ஈடுபட்டு உள்ளது தெரியவந்தது.

இவரும் இவரது தலைமையிலான கும்பலும் தனித் தனியாகவும். கூட்டாகவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 50 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் விசாரணையில் இவர் தனியாக இவர்கள் கொள்ளையடிக்கும் நகைகளை சந்திரசேகரன், பெருமாள், காளிதாஸ் மற்றும் ஒரு பெண் உட்பட 4 நபர்களிடம் கொடுத்து பணமாக மாற்றி வருவதும் தெரியவந்து உள்ளது.

மேலும் அவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் தங்கம், ரொக்கம், கார்கள். விலை உயர்ந்த பைக்குகள் கைப்பற்றப்பட்டு உள்ளது. மேலும் இவர்கள் கொள்ளை அடித்து சேகரித்து உள்ள பணத்தை பயன்படுத்தி ராஜபாளையத்தில் சுமார் 4.5 கோடி மதிப்பீலான ஸ்பின்னிங் மில் வாங்கி உள்ளதும் விசாரணையில் தெரிய வருகிறது.

இவ்வழக்கில், மனோஜ்குமார், சுதாகர். ராம்பிரகாஷ், பிரகாஷ் ஆகியோரை தனிப்படையினரால் தேடப்பட்டு வருகிறது.

கொள்ளையடித்த பணம், பொருட்களை வைத்து ₹4.5 கோடி மதிப்பில் திருடன் நூற்பாலை வாங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Lokesh Kanagaraj Kaithi 2 Updates சொர்க்கவாசல் படத்தால் கைதி 2 – க்கு சிக்கல்..குழப்பத்தில் லோகேஷ் ..!
  • Views: - 433

    0

    0