கடலூர் கொலை வழக்கு; அம்மா சாவுக்கு பழிக்குப்பழி வாங்கினேன்; கைதான குற்றவாளி சங்கர் ஆனந்த் வாக்குமூலம்
Author: Sudha19 July 2024, 10:11 am
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே அடையாளம் தெரியாத கும்பலால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டு, அவர்களது உடல்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது.
கொல்லப்பட்டவர்கள் ஹைதராபாத் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் எஸ் சுதன் குமார் (40), அவரது மகன் எஸ் நிஷாந்த் (10), மற்றும் அவரது தாயார் எஸ் கமலேஷ்வரி (60), என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
திங்கள்கிழமை காலை காராமணிக்குப்பம் கிராம மக்கள் சுதன் குமாரின் வீட்டில் இருந்து புகை வருவதைக் கண்டு நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையிலான குழுவினர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு வெளியில் இருந்து பூட்டப்பட்டிருந்தது.கதவை உடைத்து உள்ளே நுழைந்த குழுவினர், வீட்டில் மூன்று வெவ்வேறு அறைகளில் பாதி கருகிய நிலையில் மூன்று உடல்கள் இருப்பதைக் கண்டனர். வீடு முழுவதும் ரத்தக்கறை படிந்திருந்தது.
இந்தப் படுகொலைக்கு பெண் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்தனர் உண்மையான குற்றவாளியை பிடித்து விடுவோம் என எஸ்.பி ராஜாராம் உறுதியாக கூறியிருந்தார். தற்போது இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் ஆனந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் சாகுல் ஹமீது மற்றும் முகமது அலி ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இது பற்றி சங்கர் ஆனந்திடம் போலீசார் நடத்திய விசாரணையில் தன் தாய் தற்கொலைக்கு சுதன்குமார் காரணம் என்பதால் குடும்பத்துடன் கொலை செய்ததாக கைதான சங்கர் ஆனந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.தந்தையை இழந்து வாழ்ந்த சங்கர் ஆனந்தின் தாய், கடந்த ஜனவரி மாதம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.தனது தாயின் தற்கொலைக்கு சுதன் குமார் தான் காரணம் என கைதான சங்கர் ஆனந்த் சொல்லியுள்ளார்.மேலும் சம்பவத்தன்று சுதன்குமாரின் தாய் கமலேஸ்வரி தன்னை அனாதை என்று திட்டியதால் மேலும் ஆத்திரம் அடைந்ததாக சங்கர் ஆனந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அந்த சிறுவனை எதற்காக கொலை செய்தாய் என்று போலீசார் கேட்டதற்கு சிறுவனை வெளியில் விட்டால் நடந்த விஷயங்களை சொல்லி விடுவான் என்பதால் அவனையும் கொலை செய்ய நினைத்தேன். வீட்டில் இருந்த தலையணையை சிறுவன் முகத்தில் வைத்து அழுத்தி அதன் பிறகு அவனது கழுத்தை அறுத்தேன். மூவரையும் கொலை செய்த பிறகு வெளியில் செல்லவில்லை அதிகாலை நான்கு முப்பது மணி அளவில் தான் வீட்டிலிருந்து வெளியே சென்றேன் எனவும் மறுநாள் ஜூலை 14ஆம் தேதி நண்பர்களுடன் சென்று பெட்ரோல், ஆசிட் ஊற்றி மூன்று பேரையும் எரித்தோம் எனவும் பின்னர் பீரோவில் இருந்த பணம் நகைகளை எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டிவிட்டு தப்பித்தோம் எனவும் போலீஸ் கண்டுபிடிக்காது என நினைத்தோம் என்றும் சொல்லி இருக்கிறார் கைதான சங்கர் ஆனந்த.