ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள்.. வாஜ்பாய் செய்யாததை செய்த மோடி அரசு : குவியும் கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2024, 2:41 pm

அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்வதற்கும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் 58 ஆண்டு காலமாக இருந்து வந்த தடையை மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தற்போது நீக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

1948 ஆம் ஆண்டு தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக முதல் முறையாக தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சர்தார் வல்லபாய் படேல் தடை விதித்தார்.

சில காலங்களுக்கு பிறகு நன்னடத்தை பேரில் அந்த தடை நீக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1966 வாக்கில் பசுக்கொலைகளுக்கு போராடுகிறோம் என்று வெகுஜன ஆதரவை ஆர்எஸ்எஸ் அமைப்பு திரட்டி போராட்டம் நடந்தத் துவங்கியது.

இதன் உச்சமாக பாராளுமன்றத்தில் பசுக்கொலைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடந்தது. இதனைத்தொடர்ந்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரவும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதித்தார்.

இடையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினோடு நெருங்கிய தொடர்புடைய பாஜக ஆட்சி அமைந்த போதும் பிரதமர் வாஜ்பாய் ஆர்எஸ்எஸ் மீதான இந்த தடையை நீக்காத நிலையில் தற்போது 3 வது முறையாக பிரதமர் ஆகியுள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின் மோடி மீது ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பது சமீப காலமாக பொது வெளியில் அவர்களின் பேச்சில் இருந்து தெரிகிறது.

இந்த விரிசலை சரி செய்யவே ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இந்த உபகாரத்தை மோடி செய்து கொடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதற்கிடையில் தடையை நீக்கியதற்க்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!