வானத்தில் காத்திருக்கும் தேவதை; 53 நாட்கள்; நல்ல செய்தி சொல்லுமா நாசா?உச்சகட்ட எதிர்பார்ப்பில் உலகம்..
Author: Sudha30 July 2024, 3:11 pm
இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இவருடைய தந்தை தீபக் பாண்ட்யா குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.சுனிதாவும் மற்றொரு விஞ்ஞானியான புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து தங்களது பணியை முடித்துவிட்டு ஜூன் 13ஆம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என அமெரிக்க விண்வெளி மையமான நாசா தெரிவித்தது.
ஆனால் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஹீலியம் கசிவு மற்றும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. மீண்டும் மீண்டும் போயிங் ஸ்டார்லைனரில் பிரச்சனை ஏற்பட்டதால் பயணங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் 53 நாட்களுக்கும் மேலாக சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ளார். இதனிடையே உடல் நலக்குறைவாலும் பாதிக்கப்பட்டார். இதனால் சுனிதா வில்லியம்ஸ்க்கு என்ன ஆனது? அவர் எப்போது பூமிக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தோடு இயக்கப்பட்டு இருக்கும் போயிங் விண்கலத்தின் ஃப்ளைட் கன்ட்ரோலர் த்ரஸ்டர்கள் அடுத்தடுத்து சோதனை செய்யப்பட்டு சோதனை வெற்றியடைந்ததாக நாசா அறிவித்தது.
போயிங் விண்கலத்தில் ஹீலியம் கசிவு சரி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் ஆகஸ்ட் மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் பூமிக்கு திரும்பலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவது குறித்து வெளியாகியுள்ள தகவல் அவர்களின் குடும்பத்தினரை நிம்மதி அடைய செய்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் ஒலிம்பிக் வீரர்களுக்கு வாழ்த்து சொன்ன வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.