உஷாரய்யா உஷாரு.. ONLINE விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்ற வாலிபர் மாயம்: மீட்டுத் தர மனைவி கோரிக்கை…!!
Author: Sudha31 July 2024, 11:09 am
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கு திருமணமாகி சுந்தரி என்ற மனைவியும், மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. முத்துக்குமார் அடிக்கடி ஏஜெண்டுகள் மூலம் வெளிநாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சென்று வருவார். திருமணத்திற்கு பின்னர் மீண்டும் வெளிநாடு சென்று விட்டு கடந்த மாதம் தான் ஊருக்கு வந்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் மீண்டும் தாய்லாந்து செல்ல உள்ளதாக மனைவி சுந்தரியிடம் கூறியுள்ளார். மனைவி சுந்தரி எந்த ஏஜெண்ட் மூலம் செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு இந்த முறை நான் ஆன்லைன் மூலம் ஒரு கம்பெனிக்கு வேலைக்கு கேட்டிருந்தேன். அவர்கள் என்னை வேலைக்கு அழைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி மீண்டும் தாய்லாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார்.பேங்காங் விமான நிலையம் சென்றடைந்தவுடன் முத்துக்குமார் வாட்சாப் மூலம் அவரது மனைவி சுந்தரிக்கு பேசியுள்ளார்.
விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டு மொபைல் சிம்கார்டு ஒன்றையும் வாங்கியுள்ளார். அங்கிருந்து கார் மூலம் ஹோட்டல் ரூமுக்கு சென்ற முத்துக்குமார், அதன்பின் எங்கு சென்றார் என தெரியவில்லை. அவரது மனைவி சுந்தரியிடமும் பேசாமல் உள்ளார்.
முத்துக்குமாரை பல முறை தொடர்பு கொள்ள முயன்றும் கண்டுபிடிக்க முடியாததால், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மூன்று வயது பெண் குழந்தையுடன் சென்று தனது கணவரை மீட்டுத் தரும்படி புகார் அளித்துள்ளார்.