ஓபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த முன்னாள் அமைச்சர் : அதிமுகவில் இணைந்ததால் பரபரப்பு!
Author: Udayachandran RadhaKrishnan31 July 2024, 5:09 pm
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணி என தனித்தனியாக பிரிந்தது. கட்சியில் இருந்து ஓபிஎஸ்சை நீக்கி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் முடிவெடுத்து அறிவித்தது.
இதையடுத்து அதிமுகவை மீட்போம், இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்று இரு தரப்பினரும் தங்களுடைய மோதலை உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்ற நிலையில், இறுதியாக எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.
கட்சியும் அவரது வசம் ஆன பிறகு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுக உரிமை மீட்பு குழுவை உருவாக்கினார்.
அதில் முன்னாள் அமைச்சர்களான வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், கு.ப. கிருஷ்ணன் உள்பட ஒரு சிலர் கைகோர்த்து பயணித்தனர். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் தோல்வியை சந்தித்தார்.
அங்கு இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்ட நிகழ்வு அவரது அணியில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை. அவரது அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ஏற்கனவே அங்கிருந்து விலகி விட்டார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்.. மீறினால் கைது? திடீர் ட்விஸ்ட் வைத்த நீதிமன்றம்!!
இதையடுத்து அவர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று விரைவில் அதிமுகவில் சேர உள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.