நாலுக்கு ஒண்ணு: சமயபுரம் கோவிலில் குவிந்த மக்களை குறிவைத்து கல்லா கட்டிய கூட்டம்; கடுப்பான பக்தர்கள்…!!
Author: Sudha4 August 2024, 6:02 pm
சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மொட்டை அடித்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் சாமி தரிசனம் செய்து வருவார்கள்.
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
குறிப்பாக ஆடி அமாவாசையான இன்று அதிகாலை முதலே திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பெரம்பலூர், அரியலூர், சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாலையிலே வருகை தந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலை சுற்றி கிராக்கி என்ற பெயரில் இடைத்தரகர்கள் ஆடி அமாவாசையான இன்று ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் 10 நிமிடத்தில் சாமியை தரிசனம் செய்துவிட்டு வந்துவிடலாம் என்றும், தரிசனம் செய்து வந்த பிறகு காசு கொடுத்தால் போதும் என பேசி உள்ளனர்.
மேலும் 5 பேர் இருக்கிறீர்கள் ஒருத்தருக்கு இலவசம் மீதமுள்ள நான்கு பேருக்கு 4000 கொடுங்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்துவிடலாம் என்றும் பேரம் பேசி உள்ளனர்.
சமயபுரம் கோயிலை சுற்றி 50க்கும் மேற்பட்டோர் கிராக்கி என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு கோவில் ஊழியர்களுக்கு கமிஷன் கொடுத்து உள்ளே சாமி தரிசனம் செய்ய அழைத்துச் செல்கின்றனர்.
இதனை காவல்துறையினரும் கண்டு கொள்ளாமல் அவர்களை உள்ளே அனுமதித்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கு முன்னால் இருந்த இணை ஆணையர் கல்யாணி கிராக்கி என்று பலரை காசு வாங்கிக் கொண்டு உள்ளே அழைத்து செல்வதை தடுத்து கட்டுப்படுத்தினார். தற்போது புதிய இணை ஆணையர் பிரகாஷ் பொறுப்பேற்று உள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.