பள்ளி வகுப்பறையில் கஞ்சா புகைத்த மாணவன்.. அரசு நடத்தும் கஞ்சா வேட்டை சும்மாவா? அன்புமணி டவுட்!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2024, 1:06 pm

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னையை அடுத்த பழவந்தாங்கல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் வகுப்பு நேரத்தில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வும், அதைத் தொடர்ந்து அந்த மாணவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ள தகவல்களும் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன.

இந்தியாவின் எதிர்காலத் தூண்களான மாணவர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி எவ்வாறு திசை மாறிப் போகின்றனர் என்பதை நினைக்கவே அச்சமாகவும், கவலையாகவும் உள்ளது.

பழவந்தாங்கல் அரசு பள்ளியில் கஞ்சா புகைத்ததாக பிடிபட்ட மாணவர், நீண்டகாலமாகவே அப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதும், அவரிடம் பல கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பள்ளிக்கு மிக அருகிலேயே, பழவந்தாங்கல் தொடர்வண்டி நிலையம் அருகில் கஞ்சா விற்கப்படுவதாகவும், அங்கிருந்து தான் மாணவர் கஞ்சா வாங்கியதாகவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மாணவருக்கு கஞ்சா விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பல ஆண்டுகளாக தொடரும் போதிலும் கஞ்சா வணிகத்தைத் தடுக்க அரசோ, காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருவது குறித்தும், அதைத் தடுக்க வேண்டியதன் தேவை குறித்தும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இது தொடர்பாக இரு முறை நேரில் சந்தித்து போதைப் பொருட்கள் நடமாட்டத்தைத் தடுக்கும்படி வலியுறுத்தினேன். ஆனால், எந்த பயனும் இல்லை.

தமிழ்நாட்டில் கஞ்சா வணிகத்தை ஒடுக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி வரும் தமிழக அரசும், காவல்துறையும் அவ்வப்போது கஞ்சா 1.0, கஞ்சா 2.0, கஞ்சா 3.0, கஞ்சா 4.0 என்ற பெயரில் சோதனை நடத்துவதாகவும், ஒவ்வொரு முறையும் டன் கணக்கில் கஞ்சா பிடிபடுவதாகவும், பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்படுவதாகவும் பெருமைப்பட்டுக் கொள்கின்றன.

ஆனால், அதனால் என்ன பயன்? பள்ளிக்கு அருகிலேயே, மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதும் தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது.

பழவந்தாங்கல் பள்ளிக்கு அருகில் மட்டும் தான் இந்த நிலைமை என்று கூற முடியாது. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான பள்ளிகளில் இதே நிலை தான். அப்படியானால், ஒவ்வொரு முறையும் கஞ்சா வேட்டை பெயரளவுக்குத் தான் நடக்கிறது, காவல்துறை ஒத்துழைப்புடனேயே கஞ்சா வணிகம் நடக்கிறது என்று தான் கருத வேண்டியுள்ளது.

இதை தமிழக அரசும், காவல்துறையும் வேடிக்கைப் பார்ப்பது மிகவும் ஆபத்தானது. கஞ்சா போதைக்கு பள்ளி மாணவர்களும் அடிமையாகாமல் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் கஞ்சா புழக்கத்தை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

  • Vidamuyarchi OTT release announcement ரசிகர்ளுக்கு பொங்கல் பரிசு கொடுத்த லைக்கா…விடாமுயற்சி படத்தின் OTT-உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்…