விமான நிலைய சோதனைகளுக்கு கல்தா கொடுத்து 2 முறை பயணம்: எப்படி சாத்தியம்?: அதிரவைத்த கில்லாடி…..!!

Author: Sudha
14 August 2024, 11:01 am

விமானத்தில் பயணிக்கும் பயணிகள் பலகட்ட சோதனைகளுக்கு பிறகே விமானத்தில் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். சிறிய சந்தேகம் வந்தாலும், உடனடியாக தடுத்து நிறுத்தப்படுவதுடன் கடுமையான விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆனால் நார்வேயை சேர்ந்த ஒரு கில்லாடி நபர் தொடர்ந்து 2 நாட்களாக விமான நிலைய ஊழியர்களின் சோதனையில் இருந்து தப்பி, டிக்கெட்டே இல்லாமல் விமானத்தில் பறந்துள்ளார். 2 வது நாளில் தான் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

நார்வேயை சேர்ந்த 39 வயதான நபர் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி, ஜெர்மனியின் பரபரப்பான விமான நிலையங்களுள் ஒன்றான முனிச் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு, பயணிகள் அனைவரும் விமான டிக்கெட்டை ஸ்கேன் செய்து, ஆட்டோமெட்டிக் நுழைவு வாயில் வழியாக செல்வதை பார்த்துள்ளார்.

அப்போது ஒரு பயணியின் பின்னால் நின்று கொண்டு, அவர் ஸ்கேன் செய்து செல்லும்போது இவரும் கூடவே சென்று அடுத்த படி நிலையை அடைந்தார்.

இவரது துரதிர்ஷ்டம் அந்த விமானத்தில் அனைத்து சீட்களும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் சீட் கிடைக்காமல் நின்றிருந்த அவரை பிடித்து விசாரித்ததில் மோசடியாக வந்ததை ஒப்புக்கொண்டார். விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை எச்சரித்து அனுப்பினர்.

அடுத்த நாளும் அதே ‘டெக்னிக்’ பின்பற்றி, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் செல்லும் விமானத்தில் ஏறினார். இப்போது சில சீட்கள் காலியாக இருந்ததால் அதில் ஒன்றில் அமர்ந்து விமானத்தில் பறந்துள்ளார்.

ஸ்டாக்ஹோம் விமான நிலையத்தில் விமான ஊழியர்களின் சோதனையில் சிக்கியதை அடுத்து, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பிடிப்பட்ட அந்நபர் பயணிகளுக்கோ, விமானத்திற்கோ எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை

ஆனாலும் சட்டவிரோதமாக ஒரு நாட்டிற்குள் நுழைந்து, போக்குவரத்து மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தனை சோதனைகளையும் தாண்டி எப்படி அவரால் செல்ல முடிந்தது என்பது குறித்தும் முனிச் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 965

    0

    0