அதிமுக எம்எல்ஏ உறவினர் கொலையில் திடீர் திருப்பம்.. நகைக்காக பேரனே கொன்றது அம்பலம்!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2024, 6:19 pm

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரியேரிப்பட்டி ஊராட்சி , அம்மன்கோவில்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் பொன்னுசாமி, பொன்னியம்மாள் மூத்த தம்பதியினர் வசித்து வந்தனர்.

இவர்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்ட நிலையில், பொன்னியம்மாளின் கணவர் பொன்னுசாமியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் , 85 வயதான மூதாட்டி பொன்னியம்மாள் மட்டும் தனியாக வாழ்ந்து வந்தார்.

இவருக்கு விவசாய தோட்டங்கள் உள்ளது. அதில், ஆட்களை வைத்து விவசாய பணிகளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3-ம் தேதியன்று காலையில் தோட்டத்தில் வேலை செய்ய வந்தவர்கள் , பாட்டியை காணவில்லை என்று தாரமங்கலம் ஆசிரியர் காலனியில் வசிக்கும் பேரன் கணேசனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தனது பாட்டியை காணவில்லை என்றும் கண்டு பிடித்து கொடுக்குமாறும் கணேசன் தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் கடந்த 7-ம் தேதியன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் பொன்னியம்மாளின் மச்சாண்டார் பேரன் சித்துராஜ் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் சித்துராஜை அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அவரது நண்பர்கள் கருக்குப்பட்டி தனுஷ், அம்மன்கோவில்பட்டி மாரிமுத்து ஆகியோர் உதவியுடன் பொன்னியம்மாளை கொலை செய்து, பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றில் உடலை வீசியது தெரிய வந்தது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த தொளசம்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது, தொழிலில் நஷ்டம் அடைந்த சித்துராஜ், சின்னப் பாட்டியான பொன்னியம்மாளிடம் உள்ள பணத்தை பறிக்க திட்டமிட்டுள்ளார். ஆனால், மூதாட்டி பொன்னியம்மாள் பணம் கொடுக்க மறுத்ததால் , அவரை இரவு நேரத்தில் தூங்கும் போது தலையணையை வைத்து அமுக்கி, பின்னர் அடித்து கொலை செய்துள்ளார்.

பிறகு பாட்டியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி, நண்பர்கள் உதவியுடன் காரில் கொண்டு சென்று ஆற்றில் வீசியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 3 பேரையும் நேற்று கைது செய்த தொளசம்பட்டி போலீசார், உடலை வீசிய இடத்திற்கு மூன்று பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் பொண்ணியம்மாளிடம் இருந்து திருடிய தோடு , மூக்குத்தி , கால் செயின் ஆகியவற்றை நகை அடகு கடையில் இருந்து குற்றவாளிகள் மூலமாக மீட்டனர்.

இதனை அடுத்து மூன்று பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர் . கொலை செய்யப்பட்ட பொன்னியம்மாள், ஓமலூர் அதிமுக எம்.எல்.ஏ மணியின் சொந்த அத்தை என்பது குறிப்பிடத்தக்கது.

  • lokesh kanagaraj movie actor sri present fitness photo shocking fans லோகேஷ் கனகராஜ் பட நடிகருக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்…