பள்ளி மாணவி பாலியல் வழக்கு; கைதான சிவராமன் மரணம்; அவரது தந்தையும் உயிரிழப்பு..! நடந்தது என்ன?..

Author: Vignesh
23 August 2024, 9:43 am

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காவேரிப்பட்டணம் காந்திநகர் காலனியை சேர்ந்த சிவராமன் (35) என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அரசியல் கட்சியை சேர்ந்த அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

மேலும், பள்ளி மாணவி பலாத்கார சம்பவத்தை மறைக்க முயன்றதாக பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் உள்பட மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் சிவராமன் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. ரகசிய இடத்தில் வைத்து சிவராமனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது தப்பித்து ஓட முயன்றபோது தவறி விழுந்ததில் அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பலத்த பாதுகாப்புடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே சிவராமன் எலிகளுக்கு கொடுக்கப்படும் விஷ மாத்திரையை கைது செய்யப்பட்ட 18-ந் தேதி அன்று சாப்பிட்டதாக போலீசாரிடம் நேற்று தெரிவித்தார். உடனடியாக அவருக்கு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ரத்த பரிசோதனையும் செய்தனர்.

அப்போது அவர் எலிகளுக்கான விஷ மாத்திரையை தின்றதும், அந்த விஷம் ரத்தத்தில் கலந்து இருப்பதையும் டாக்டர்கள் உறுதி செய்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிவராமன் உயிரிழந்தார். பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த முக்கிய குற்றவாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், சிவராமனின் தந்தை அசோக்குமார் காவேரிப்பட்டினம் அருகே நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.

  • Ajith screamed after Vijay's dialogue.. INTERVAL scene from GOOD BAD UGLY leaked விஜய் பட வசனத்தை வைத்து அலறவிட்ட அஜித்.. GOOD BAD UGLY படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!!