போலி NCC முகாம்.. சிவராமன் போல இன்னும் எத்தனை பேர்? உண்மை குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சியா? இபிஎஸ் சந்தேகம்!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2024, 4:41 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி NCC முகாம் நடத்தி, பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவராமன், காவல் துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே எலி மருந்து சாப்பிட்டு, காவல் துறையால் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை மரணமடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

மேலும், அவரது தந்தை திரு. அசோக்குமார் என்பவரும் நேற்று இரவு மதுபோதையில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த இரண்டு தொடர் மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவர் கொல்லப்பட்டிருக்கலாமோ என்று பொதுமக்களால் கேள்வி எழுப்பப்படுகிறது.

போலி NCC பயிற்சி முகாம்கள் எத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது? இதுவரை எத்தனை முறை நடைபெற்றுள்ளது ? கிருஷ்ணகிரி தவிர வேறு மாட்டங்களில் இதுபோல் போலி NCC முகாம்கள் நடத்தப்பட்டுள்ளனவா? சிவராமன் தவிர வேறு யாரேனும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனரா? போலி NCC முகாம்கள் நடத்தி அவர்களுக்கு NCC சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளனவா ? போலி NCC பயிற்சியாளர்களை மாணவிகளுக்கு பயிற்சியளிக்க அனுமதித்த பள்ளி நிர்வாகத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் ? போன்ற பல சந்தேகங்களுக்கு விடை அளிக்கக்கூடிய சிவராமன், தற்கொலை செய்து கொண்டது பொதுமக்களிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது.

ஏற்கெனவே, தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை வழக்கில் சரணடைந்த விசாரணைக் குற்றவாளி ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட போது எழுந்த கேள்விகளுக்கும் விடியா திமுக அரசிடமிருந்து முழுமையான பதில் வரவில்லை. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே போலி NCC முகாம் நடத்தி பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை, மகன் இருவரின் மரணங்கள் காவல் துறை நடத்தும் நாடகமோ என்ற சந்தேகமும் எழுகிறது.

பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான விடைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?