TELEGRAM செயலிக்கு ஆபத்து? நிறுவனரை கைது செய்த போலீஸ்.. X தளத்தில் டெலிகிராமுக்கு பெருகும் ஆதரவு!
Author: Udayachandran RadhaKrishnan25 August 2024, 11:25 am
பிரபல சமூக செய்தி பரிமாற்ற செயலியாக விளங்கும் டெலிகிராம் நிறுவனத்தின் சி.இ.ஓ. பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷிய நாட்டைச் சேர்ந்த 39 வயதான பாவெல் துரோவ் தனது சகோதரர் நிகோலாய் உடன் இணைந்து கடந்த 2013 ஆம் ஆண்டில் டெலிகிராம் செயலியை நிறுவினார்.
தற்போது துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டெலிகிராம் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆகவும் பணியாற்றி வரும் பாவெல் துரோவ் துபாய் குடிமகனாக அங்கு வசித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு தனது பிரைவேட் ஜெட்டில் அஜர்பைஜான் நாட்டில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகே உள்ள போர்கெட் விமான நிலையத்தில் வைத்து வாரண்ட்டோடு பிரான்ஸ் போலீசார் அவரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
தீவிரவாத இயக்கங்களுக்குத் துணைபோவது, போதைப் பொருள் விநியோகம், சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதற்கு டெலிகிராம் செயலி அதிகளவில் பயன்பட்டு வருகிறதென்றும், அதை டெலிகிராம் நிறுவனம் எந்த தடையும் இன்றி அனுமதித்து, பயனர்களின் தகவல்களை அரசுகளிடம் இருந்து பாதுகாக்கவும் செய்கிறது என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரான்ஸ் நாட்டு போலீஸ் அவரை கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.