சட்டவிரோதமாக பாஸ்போர்ட் பெற்ற இலங்கை அகதி கைது.. தமிழக பெண்ணை காதல் திருமணம் செய்து தங்கியது அம்பலம்!

Author: Vignesh
28 August 2024, 1:19 pm

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் 2006 ம் ஆண்டு பயில்வதற்க்காக சென்ற நேரத்தில் சிவகாசி மாவட்டத்தில் உள்ள சண்டியாபுரம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருந்த ஜார்ஜ் வாஷிங்டன் என்ற வாலிபரும் படித்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு கடந்த 2011 ம் ஆண்டு பெண்ணின் ஊரான வள்ளவிளையில் வைத்து திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து, இலங்கை அகதிகள் முகாமிற்கு செல்லாமல் வள்ளவிளையிலேயே மனைவியுடன் தங்கி இருந்து டெம்போ ஓட்டும் தொழில் செய்து வந்துள்ளார்.

தொடர்ந்து, வள்ளவிளையில் உள்ள முகவரியை பயன்படுத்தி ஆதார் ரேசன் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி உள்ள அவர் அந்த ஆவணங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக பாஸ்போர்ட் எடுத்துள்ளார். இது சம்பந்தமாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் கொல்லங்கோடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், வள்ளவிளை மீனவ கிராமத்தில் வாகனம் ஓட்டி வந்த ஜார்ஜ் வாஷிங்டனை கைது செய்த போலீசார் காவல்நிலைய அழைத்து வந்து நடத்திய விசாரணையில், கடந்த 1990 ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரின் போது அங்கிருந்து கள்ளத்தோணி ஏறி ஜார்ஜ் வாஷிங்டனின் குடும்பம் இராமேஸ்வரம் பகுதிக்கு வந்து அங்கிருந்து சிவகாசி மாவட்டத்தில் உள்ள சாண்டியாபுரம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருந்து பள்ளி கல்லூரி படிப்புகளை முடித்ததாகவும், தொடர்ந்து வள்ளவிளையில் திருமணம் செய்து தங்கி இருந்து வந்ததாகவும், தனது உடன்பிறந்த ஒரு சகோதரி மற்றும் சகோதரர் இருவரும் வள்ளவிளை மீனவ கிராமத்தில் இருந்து தான் திருமணம் செய்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளதாகவும் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

இதனையடுத்து, போலீசார் இலங்கையில் இருந்து இந்தியா வந்து சட்டவிரோதமாக பாஸ்போர்ட் எடுத்த குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 172

    0

    0