தவறி விழுந்து ஒருவர் பலியான சம்பவம்: ஆக்ஷன் எடுத்த நெடுஞ்சாலை துறை..!
Author: Vignesh30 August 2024, 1:16 pm
கோவை அடுத்த பேரூர், சிறுவாணி சாலையில் மேற்கு புறவழிச் சாலைக்காக பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக சாலையின் நடுவே 16 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. ஆனால் அந்த இடத்தில் தடுப்பு மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு பலகை எதுவும் வைக்கப்படாமல் இருந்தது. ஆனாலும் அந்த வழியாக வாகனங்கள் மெதுவாக சென்று வருகின்றன.
மேலும், அந்தப் பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்பட்டும், இதன் காரணமாக சாலை பள்ளம் இருப்பதை அறியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற பேரூர் தேவராயபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி கார்த்திக் மோட்டார் சைக்கிளுடன் 16 அடி பள்ளத்தில் தவறி விழுந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். சாலையில் பள்ளத்தின் அருகே எச்சரிக்கை அறிப்பு, தடுப்பு போன்றவை வைக்காததே விபத்துக்கு காரணம் என்று வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து பள்ளம் தோண்டப்பட்டு உள்ள இடத்தில் சுற்றிலும் தடுப்பு பலகைகள் வைத்து வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலை துறை சார்பில் பேரூர் – சிறுவாணி சாலையின் நடுவே தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றிலும் தடுப்புக் கம்பிகள் வைத்து திரைசீலைகளை கட்டி உள்ளனர். மேலும் அங்கு எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.
அதோடு, அங்கு சூரிய மின் சக்தியுடன் ஒளிரும் சிகப்பு விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், அந்த பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு அமைக்கப்பட்டு உள்ள மண் சாலையை தரமாக அமைத்து தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.