மலையாள திரையுலகில் ஷாக்..பாலியல் புகாரில் சிக்கிய நடிகர்களை கைது செய்ய கேரள போலீஸ் முடிவு!
Author: Udayachandran RadhaKrishnan1 September 2024, 3:33 pm
கேரளாவில் நடிகை பலாத்காரம் தொடர்பான வழக்கில் பிரபல நடிகர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாகவும், மலையாள பட உலகில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தவும் அரசு முடிவு செய்தது.
இதற்காக கடந்த 2017-ம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் 3 பேர் கொண்ட கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் தீவிர விசாரணை நடத்தி 2019-ம் ஆண்டு தனது அறிக்கையை அரசிடம் சமர்பித்தது. 233 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது.இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்வியின் பயனாக அறிக்கையின் சில தகவல்கள் வெளியானது. அதில் மலையாள பட உலகில் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பது உறுதியானது.
இந்த அறிக்கை வெளியானதையடுத்து, மலையாள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.பல்வேறு நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கருத்துக்களை வெளியிட்டனர். கேரள திரைப்பட அகாடமி இயக்குநர் ரஞ்சித் மீது மேற்கு வங்காள நடிகை ஸ்ரீலேகா பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்தார். தொடர்ந்து நடிகர்கள் சித்திக், முகேஷ், எடவேல பாபு, சுதீஷ், டைரக்டர் ஸ்ரீகுமார் மேனன் ஆகியோர் மீதும் பாலியல் புகார்கள் கூறப்பட்டன.
இந்த புகார்கள் தொடர்பாக விசாரிக்க கேரள அரசு சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது. இந்த குழு தங்கள் விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த சூழலில் பாலியல் புகாரில் சிக்கிய சித்திக், மலையாள திரைப்பட நடிகர்கள் சங்க பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், டைரக்டர் ரஞ்சித் கேரள திரைப்பட அகாடமி இயக்குநர் பதவியில் இருந்தும் விலகினர்.இதற்கிடையில் பாலியல் புகார்கள் தொடர்பாக டைரக்டர்கள், நடிகர்கள் மீது போலீஸ் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, எடவேல பாபு மற்றும் டைரக்டர் ரஞ்சித் உள்பட பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறியிருக்கும் நடிகைகளிடம் வாக்குமூலமும் பெறப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நடிகர்களை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனை அறிந்து பாலியல் வழக்கில் சிக்கிய நடிகர்கள் தங்களின் மீது கூறப்பட்டிருக்கும் பாலியல் புகார்களை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.இதற்காக அவர்கள் வக்கீல்களுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.
அதே நேரத்தில் வழக்கில் தொடர்புடைய நடிகர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ற விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.இந்த நிலையில் நடிகர் முகேஷ் கொச்சி மாரட் பகுதியில் உள்ள வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்றனர். பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக அவரது வீட்டில் சோதனை செய்து சாட்சியங்களை சேகரிக்க போலீசார் முடிவு செய்தனர்.
ஆனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.ஏற்கனவே வீட்டு சாவியை ஒப்படைக்க நடிகர் முகேசுக்கு தகவல் கொடுத்ததாகவும் ஆனால் அவர் சாவியை கொடுத்துச் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது அவர் எங்கு உள்ளார்? என்ற விவரமும் தெரியவில்லை. இதனால் போலீசார் வீட்டில் சோதனை நடத்த முடியவில்லை.
இதற்கிடையில் நடிகர் முகேஷ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. ஆனால் அவர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கோவிந்தன் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் இது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் உள்ளனர்.
அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யவில்லை. இருப்பினும் விசாரணையின் போது முகேஷ் எம்.எல்.ஏ. எந்த பலனும் பெறக்கூடாது என அவர் தெரிவித்து உள்ளார்.