பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் வாழ்க்கையின் வலிகளையும் வேதனைகளையும் எதார்த்தத்தையும் வெளிப்படுத்தும் தமிழ்த்திரையுலகில் சிறந்த படைப்பாளியான மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது வெளிவந்து தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் “வாழை”.
இந்த திரைப்படம் மாரி செல்வராஜ் தனது சிறு வயது வாழ்க்கையை மையப்படுத்தி…வலிகளையும் வேதனைகளையும் உள்ளடக்கி எடுத்து இருக்கிறார். இந்த திரைப்படத்தை பார்த்த எல்லோருமே கண் கலங்கி மன வேதனைடன் வெளியில் வருவதை நம்மால் பார்க்க முடிந்தது.
வாழை திரைப்படம் இதுவரை ரூ. 27 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள இயக்குனர் ராம், மாரி எழுதின முதல் ஸ்க்ரிப்ட்டே வாழை தான். அவன் இந்த படத்தின் கதையை என்கிட்ட வந்து சொன்னப்போ நான் பண்ண வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டேன்.
முதல் படமா இதை அவன் பண்ணியிருந்தால் எனக்கு கற்றது தமிழ் என்ன ஆச்சோ அதே நிலைமைதான் அவனுக்கு ஆகியிருக்கும். மாரி செல்வராஜ் எப்படி ஜெயிக்கணும்னு நினைச்சேன்னா அவன் வணிக ரீதியா பெரிய கதாநாயகர்களை உருவாக்கி ஒரு தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி ஜெயிக்கணும் அப்படின்னு நினைச்சேன். அது இன்றைக்கு நடந்திருக்கு என்று இயக்குனர் ராம் மிகுந்த பெருமிதத்தோடு பேசி இருந்தார். இயக்குனர் ராமிடம் மாரி செல்வராஜ் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.