காரில் காதலனுடன் தப்பியோடிய மகள்.. துரத்திச் சென்ற தாயின் பாசப் போராட்டம் : வைரலாகும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
5 September 2024, 6:06 pm

தஞ்சாவூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் நூற்பாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஊருக்கு செல்ல திட்டமிட்ட இளம் பெண் தனது தாயுடன் பேருந்துக்காக கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்து காரொன்றில் இளம்பெண் திடீரென ஏற முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் தன் மகளை தடுத்து நிறுத்த காரில் வந்த இளைஞர்கள் இளம்பெண்ணை காருக்குள் இழுத்து அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர்.

அப்போது அந்த இளம் பெண்ணின் முடியை பிடித்தவாறு அவரது தாய் காரின் பின்னால் ஓடியுள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினால் ஓடி வந்து காரை தடுத்து நிறுத்தி இளைஞர்களை கீழே இறக்கி விசாரித்தனர்.

விசாரணையில் காரில் வந்த இளைஞர்களில் ஒருவர் அந்த இளம் பெண்ணின் காதலன் என்பதும், தப்பிச்சென்று அந்த இளைஞனுடன் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் இளம்பெண்ணை காரில் இருந்து கீழே இறக்கி விடுமாறு தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் மறுக்கவே இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவலின் பேரில் அங்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் இளம்பெண்ணை காரில் இருந்து இறக்கி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் மதுக்கரை பகுதியைச் சேர்ந்த இளைஞர் 2 வருடங்களுக்கு மேலாக அந்த இளம் பெண்ணை காதலித்து வந்ததும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தப்பிச்சென்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததும் தெரியவந்தது.

இளம்பெண் தன் தாயாருடன் செல்ல மறுத்ததால் அவரை துடியலூர் பகுதியில் உள்ள காப்பகத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மகளை தடுத்து நிறுத்த தாய் காரின் பின்னால் ஓடிச் செல்லும் செல்போன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 217

    0

    0