மட்டன், சிக்கன் மற்றும் மீன் போன்ற உணவுகளை சமைக்கும் அளவுக்கு பெரும்பாலானவர்கள் வீடுகளில் நண்டு செய்வதில்லை. நண்டை பக்குவமாக சமைப்பதற்கு தெரியாத காரணத்தினாலேயே பலர் அதனை வீட்டில் சமைப்பதை தவிர்த்து விடுகின்றனர். மேலும் இதனால் ஹோட்டலில் நண்டு வாங்கி சாப்பிடுவதையே விரும்புகின்றனர். நண்டு சமைக்கும் பக்குவம் தெரிந்துவிட்டால் ஹோட்டலை விட ருசியான நண்டை வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம். அந்த வகையில் காரசாரமான நண்டு வறுவல் அசத்தலான சுவையில் எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
3/4 கிலோ – நண்டு
100 கிராம்- சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம்
2- தக்காளி
2 தேக்கரண்டி- மல்லி தூள் 1 தேக்கரண்டி- மிளகாய் தூள்
1/4 தேக்கரண்டி- கரம் மசாலா
1/4 தேக்கரண்டி- மஞ்சள் தூள்
தேவையான அளவு உப்பு
1 தேக்கரண்டி- மிளகுத்தூள்
1 1/2 தேக்கரண்டி- இஞ்சி பூண்டு விழுது
2 கொத்து கருவேப்பிலை சிறிதளவு கொத்தமல்லி தழை
2 தேக்கரண்டி- சமையல் எண்ணெய்
செய்முறை
முதலில் 3/4 கிலோ அளவுக்கு நண்டை சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி 1/2 தேக்கரண்டி சோம்பு மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்க்கவும்.
அடுத்து 100 கிராம் அளவுக்கு சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்க்கவும். சின்ன வெங்காயத்தை நறுக்காமல் முழுதாகவே சேர்த்துக் கொள்ளலாம்.
வெங்காயத்தின் பச்சை வாசனை போனதும் அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்குங்கள்.
பின்னர் 2 நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
இப்போது 1/2 தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா ஆகியவற்றை 30 வினாடிகள் நன்றாக வதக்கவும்.
பின்னர் நாம் சுத்தம் செய்து வைத்த நண்டு சேர்த்து நன்றாக கிளறவும். மசாலாவுடன் நண்டு சேரும்படி நன்றாக பிரட்டி கொள்ளுங்கள்.
இந்த நண்டு வறுவலுக்கு தேவையான உப்பு மற்றும் நண்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
நண்டு வெந்து இறக்கும் சமயத்தில் ஒரு தேக்கரண்டி கருப்பு மிளகு தூள் சேர்த்து ஒரு கையளவு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் அருமையான நண்டு வறுவல் தயார்.