தீ விபத்தில் சிக்கி உடல் கருகி பெண்கள் உயிரிழந்த விவகாரம்… மாநகராட்சி நோட்டீஸ் : கட்டிட உரிமையாளர் காட்டமான பதில்!
Author: Udayachandran RadhaKrishnan13 September 2024, 12:03 pm
மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்ரா பாளையத்தில் அமைந்துள்ள தனியார் பெண்கள் விடுதியில் நேற்று குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.
இதனை அடுத்து அங்கிருந்த பெண்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மற்றொரு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி முயற்சியில் அவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அவ்வாறு செல்ல இயலாதவர்கள் வேறொரு விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து விபத்து நடந்த கட்டிடத்தின் உரிமையாளர் தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், இந்த கட்டிடத்தின் உரிமையாளர்களில் நானும் ஒருவன். நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் நடைபெற்ற தீ விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் தற்போது மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். எங்களுக்கு உண்மையிலேயே வருத்தமாக உள்ளது.
நேற்று காலை நடைபெற்ற விபத்துக்கு பிறகு மதுரை மாநகராட்சி கட்டிடத்தை இடிக்கச் சொல்லி மீண்டும் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தற்போது இடிப்பதற்கான ஆட்களை எல்லாம் நாங்கள் முறையாக அழைத்து வந்திருக்கிறோம்.
மதுரை மாநகராட்சியும் காவல்துறையும் இந்த கட்டிடத்தில் உள்ள அனைத்தையும் காலி செய்து கொடுத்து விட்டார்கள் என்றால் நாங்கள் எங்களது பணியை தொடங்கி விடுவோம்.
கடந்த 1980 ஆம் ஆண்டில் இருந்து இந்த கட்டிடத்தில் கடைகள் வாடகைக்கு விடப்பட்டு வருகின்றன. இங்கு மொத்தம் ஐந்து கடைகள் உள்ளன அதில் விசாகா விடுதிக்கு சொந்தமான கடையும் ஒன்று. இந்த கடைகள் அனைத்தும் காலி செய்து கொடுத்தவுடன் கட்டிடத்தை எடுத்து தரைமட்டமாக்கும் பணி தொடங்கும் என்றார்