எம்ஜிஆர் மட்டும் கூடுதலாக 2 வருஷம் உயிரோட இருந்திருந்தால் அது நடந்திருக்கும் : எஸ்பி வேலுமணி பேச்சு!
Author: Udayachandran RadhaKrishnan23 September 2024, 1:57 pm
சூலூர் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொது கூட்ட நிகழ்வில் அவர் இவ்வாறு பேசினார். கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கிட்டாம் பாளையத்தில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஞாயிறன்று மாலை நடைபெற்றது.
இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், திமுகவின் ஆரம்ப காலகட்டத்தில் வெற்றிக்கு எம்ஜிஆர் தான் காரணம் என பேரறிஞர் அண்ணா தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.
எம்.ஜி.ஆர் மட்டும் கூடுதலாக 2 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால் இலங்கையில் தமிழர்களுக்கென்று தனி நாடு கிடைத்திருக்கும் என தெரிவித்த அவர், இலங்கையில் இன்றும் பிரபாகரன் வீட்டுக்கு அருகே எம்.ஜி.ஆருக்கு சிலை அமைத்து தமிழ் மக்கள் மரியாதை செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
கடந்த அதிமுக ஆட்சியின் நடவடிக்கைகளால் இன்னும் 50 ஆண்டுகளுக்கு கோவை மாநகருக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாத நிலையில் உருவாக்கி இருக்கிறோம் என பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு கோவை மாவட்டத்திற்கு செய்த நலத்திட்டங்களை மேடை போட்டு விவாதிக்க தயாராக என சவால் விடுத்தார்.
மேலும் படிக்க: ரயிலில் 2 வயது பெண் குழந்தையை விட்டுச் சென்றது யார்? கல் மனதை உருக்கும் சம்பவம்!
தமிழகத்தில் தற்போது எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை ஜோராக நடைபெறுவதாக குற்றம் சாட்டிய அவர், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டினார்.
மக்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதிரியும், சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதிரியும் வாக்களிப்பதை கடந்த கால தேர்தல்கள் சுட்டிக்காட்டி உள்ளதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் வேலுமணி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலுவான கூட்டணியுடன் அதிமுக தேர்தலை சந்தித்து வெற்றி பெறும் நம்பிக்கை தெரிவித்தார்.