சீசன் மாறுது… ஹெல்தியா இருக்க அதுக்கு ஏத்த மாதிரி இதெல்லாம் மாத்த வேண்டாமா…???
Author: Hemalatha Ramkumar3 October 2024, 6:11 pm
நல்ல குடல் ஆரோக்கியம் என்பது சீரான மற்றும் சமூகமாக செயல்படும் ஒரு செரிமான அமைப்பு ஆகும். இந்த செரிமான அமைப்பில் பயனுள்ள பாக்டீரியாக்கள் உதவியுடன் செரிமானம் சீராக நடைபெற்று, ஊட்டச்சத்துக்கள் சிறந்த முறையில் உறிஞ்சப்படும். ஆரோக்கியமான குடல் என்பது வலுவான நோய் எதிர்ப்பு சக்தி, நல்ல மனநலன் மற்றும் குறைவான வீக்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. பருவ நிலையில் ஏற்படும் மாற்றமானது நமது செரிமான ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். இதற்கு முக்கிய காரணம் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் அசிடிட்டி அளவுகளில் ஏற்படக்கூடிய மாற்றம். இதன் விளைவாக செரிமான பிரச்சனைகள், வயிற்று உப்பிசம் அல்லது குறைவான நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை ஏற்படலாம். எனவே இந்த மாற்றங்களை திறம்பட சமாளிப்பதற்கு நீங்கள் மேற்கொள்ள வேண்டிய ஒரு சில முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
தேவையான அளவு நீர்ச்சத்து
போதுமான அளவு தண்ணீர் பருகுவது உங்களுடைய செரிமானத்தை சிறந்த முறையில் நடைபெற செய்து குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். மழைக்காலத்தில் பொதுவாக நமக்கு தாகம் எடுக்காது. ஆனாலும் நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 டம்ளர் தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்துங்கள். தண்ணீர் குடிக்க பிடிக்காவிட்டால் அதற்கு பதிலாக சூப், இளநீர், மூலிகை தேநீர் போன்றவற்றை பருகலாம்.
ப்ரோபயாடிக்ஸ் நிறைந்த உணவுகள்
ப்ரோபயாடிக்ஸ் என்பது உங்களுடைய குடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க உதவும் பயனுள்ள பாக்டீரியாக்கள். தயிர் மற்றும் புளிக்க வைக்கப்பட்ட உணவுகள் ப்ரோபயாடிக்கின் சிறந்த மூலங்கள். நல்ல செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு இந்த உணவுகளை அன்றாடம் சாப்பிடுவது அவசியம்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
நார்ச்சத்து என்பது பயனுள்ள பாக்டீரியாக்களுக்கு உணவாக அமைந்து மற்றும் செரிமானம் சீராக நடைபெறுவதை உறுதிப்படுத்துகிறது. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பீன்ஸ் வகைகளில் நார்ச்சத்து ஏராளமாக இருப்பதால் அவற்றை உங்களுடைய மழைக்கால டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ப்ரோபயாடிக்ஸ் நிறைந்த உணவுகள்
ப்ரோபயாடிக்ஸ் என்பது பயனுள்ள குடல் பாக்டீரியாக்களுக்கு போஷாக்கு வழங்கும் செரிமானம் ஆகாத நார்ச்சத்து. பூண்டு, வெங்காயம், வாழைப்பழம் போன்றவற்றில் ப்ரீ பயாடிக்ஸ் அதிகம் உள்ளது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உங்களுடைய குடல் பாக்டீரியா சமநிலையை சீர்குலைக்கும். இது செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே சர்க்கரை, ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் செயற்கை பிரிசர்வேட்டிவ்கள் அடங்கிய உணவுகளை தவிர்க்கவும்.
போதுமான அளவு தூக்கம் தூக்கம் என்பது குடல் ஆரோக்கியம் உட்பட உங்களுடைய ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியம். எனவே தினமும் 7 முதல் 9 மணி நேரம் நிம்மதியான உறக்கத்தை பெறுங்கள்.
மன அழுத்தம்
வானிலை மாற்றத்தோடு மன அழுத்தம் ஏற்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. இது உங்களுடைய குடலையும் பாதிக்கலாம். யோகா, தியானம் மற்றும் ஆழ்ந்த மூச்சு பயிற்சிகள் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
அன்றாட உடற்பயிற்சி மழைக்காலத்தில் பலர் உடற்பயிற்சி செய்வதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் அவ்வாறு செய்யாமல் வீட்டிற்குள்ளேயே உங்களால் முடிந்த அளவு உடற்பயிற்சிகளை செய்வது அவசியம்.
இந்த குறிப்புகளை பின்பற்றுவது மட்டும் அல்லாமல், உங்கள் உடல் உங்களுக்கு உணர்த்தும் விஷயங்களை கவனித்து, அதற்கேற்றவாறு உணவுகளை மாற்றி அமைத்து செயல்படுவது உங்கள் குடல் ஆரோக்கியத்தையும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள உதவும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.