கல்லூரிக்கு வர வேண்டாம்.. ரூட்டு தல பிரச்னையில் மாணவர் பலி!
Author: Hariharasudhan9 October 2024, 1:00 pm
ரூட்டு தல விவகாரத்தில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் உயிரிழந்த நிலையில், அங்கு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. அதிலும், ரூட்டு தல விவகாரத்தில் இருதரப்பு மாணவர்களும் பொதுப் போக்குவரத்தில் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு, அதனை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு காவல்துறை தரப்பிலும் எதிர்வினை நிகழ்த்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த வெள்ளிக்கிழமை (அக்.4) சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வந்த மாணவர் ஆ.சுந்தர் (19), வழக்கம்போல் கல்லூரியை முடித்துவிட்டு திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள பொன்பாடிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சென்றபோது, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் சுந்தரை சூழ்ந்து தாக்கினர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் பரவியது.
இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சுந்தர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். மேலும், இது குறித்து பெரியமேலு காவல் நிலையத்தில் சுந்தரின் தந்தை ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதன் அடிப்படையில், சுந்தரைத் தாக்கியதாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான சந்துரு (20), ஈஸ்வர் (19), யுவராஜ் (20), எம்.ஹரிபிரசாத் (20) மற்றும் கமலேஸ்வரன் (19) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படியுங்க: கொலையில் முடிந்த இறுதிச்சடங்கு… இருதரப்புக்கு இடையே நிகழ்ந்த மோதல் : போலீஸ் குவிப்பால் பரபரப்பு!
இந்த நிலையில், சென்னை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சுந்தர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகஅனுப்பப்பட்டது. மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று (அக்.9) 11 மணிக்கு மேல் வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், நாளை மற்றும் வரும் திங்கள்கிழமை அன்றும் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இடையில், விஜயதசமி விடுமுறையும் உள்ளது. மேலும், இன்று காலை மாணவர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்த பின்னரே, மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.