எங்களுக்கே தெரியாது.. திருச்சியில் 2 மணி நேர திக் திக்.. ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியது எப்படி?

Author: Hariharasudhan
12 October 2024, 10:53 am

திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வானில் வட்டமடித்து, பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

திருச்சி: திருச்சி விமான நிலையத்திற்கு அருகில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட நார்த்தாமலை, அன்னவாசல், முக்கணமலைப்பட்டி, கீரனூர் மற்றும் அம்மாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளின் மேல் நீண்ட நேரம் விமானம் ஒன்று வட்டமடித்துக் கொண்டிருந்தது. நீண்ட நேரம் வட்டமடித்த விமானத்தின் சத்தத்தால் ஒட்டுமொத்த ஊரும் அன்னார்ந்து பார்க்கத் தொடங்கியது. என்ன ஆனது என பொதுமக்கள் சிந்திப்பதற்குள், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு என்ற செய்திகள் வெளி வந்துக் கொண்டிருந்தன.

ஆம், வெள்ளிக்கிழமை மாலை 05.40 மணிக்கு திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்லக்கூடிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நீண்ட நேரம் வான்ல் வட்டமடித்துக் கொண்டிருந்தது. எப்படியாவது பாதுகாப்பாக தரையிறக்க வேண்டும் என்பதே 141 பயணிகளை சுமந்து கொண்டிருக்கும் விமானத்தின் விமானி மற்றும் திருச்சி விமான நிலைய அதிகாரிகளின் கண் முன் இருந்த சவால். இதில் மேலும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல், 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், கூடுதல் தீயணைப்பு வண்டிகள் மற்றும் காவல் துறை படை திருச்சி விமான நிலையத்துக்குள் வந்தது.

ஆனால், “நீண்ட நேரமாக விமானம் ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருந்தது போன்று தெரிந்தது. 4 வருடமாக விமான பயணத்தை மேற்கொண்டு வரும் எனக்கே ஒருவித பயம் ஏற்பட்டு விட்டது” என்றார், விமானத்தில் பயணித்த பயணி ஒருவர். ஆக, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விட்டதாக பயணிகள் யாருக்கும் தெரியப்படுத்தவில்லை என்பது தெரிகிறது. அது மட்டுமல்லாமல், “விமானம் தரையிறங்குவதற்கு 10 நிமிடங்கள் முன்பு தான், அவசர நிலை காரணமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்படுகிறது” என அறிவித்தனர் என்றார் மற்றொரு பயணி.

எல்லாம் இருக்க, 141 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் ஆகியோரின் உயிரை திறம்பட காப்பாற்றிய விமானி டேனியல் பெலிசோக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் இதனிடையே, திருச்சி மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரும் என்ன நடந்தது, நடக்கப் போகிறது என்ற தகவலையும் வழங்கினார். இதனிடையே, விமானத்தில் இருந்த பயணிகள் உடன் உறவினர்கள் பேசிய வீடியோக்களும் நெகிழ வைத்தது.

இந்த நிலையில், பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம் மற்றும் அவசர நிலை குறித்து சிவில் விமான போக்குவரத்து ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், விமான இயக்கக் குழுவினரால் அவசரநிலை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்திய ஏர் இந்தியா, தொழில்நுட்பக் கோளாறுக்குப் பிறகு, பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு முன், ஓடுபாதையின் நீளத்தைக் கருத்தில் கொண்டு எரிபொருளையும், எடையையும் குறைக்கவே விமானம் வானத்தில் பலமுறை வட்டமிட்டதாக விளக்கம் அளித்துள்ளது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Close menu