திருப்பதியில் உள்ள ஒரு கிராமத்தில் இறந்தவரின் உடலை மார்பளவு தண்ணீரைக் கடந்து சென்று தகனம் செய்யும் அவலம் அரங்கேறியுள்ளது.
திருப்பதி: ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ளது சுருட்டுப்பள்ளி என்ற கிராமம். இந்த கிராமத்தில் கஸ்தூரி நாயுடு என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், அவரது உடலை குடும்ப வழக்கப்படி தகனம் செய்வதற்கு குடும்பத்தினர் தயாராகினர். ஆனால், அந்த ஊரின் சுடுகாடு ஓடையை அடுத்து உள்ளது. இதன் காரணமாக, அந்தக் கிராமத்தில் யாராவது இறந்து விட்டால், உடலை ஓடையைக் கடந்து தான் எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வேண்டும்.
இதனிடையே, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, திருப்பதி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சுருட்டுப்பள்ளி கிராமத்தில் உள்ள அந்த ஓடையிலும் மார்பளவு உயரம் தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது.
இதையும் படிங்க: 3வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை.. தனியார் கல்லூரியில் அதிர்ச்சி!
இந்த நிலையில், உயிரிழந்த கஸ்தூரியின் உடலை, கிராம பொதுமக்கள் மார்பளவு தண்ணீரில் கடந்து சென்று தகனம் செய்தனர். ஏற்கனவே ஓடையைக் கடந்து தான் சுடுகாட்டுக்குச் செல்ல வேண்டியுள்ளதால், தற்போது பெய்த மழையால் மேலும் நீர் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகவு சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே, இதற்குத் தேவையான மாற்றுப் பாதையை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.