இதய பாதிப்பில் சவுக்கு சங்கர்.. ஐகோர்ட் அமர்வு முக்கிய உத்தரவு!
Author: Hariharasudhan16 October 2024, 6:32 pm
இதய பாதிப்பில் சவுக்கு சங்கர் இருப்பதால், அனைத்து வழக்குகளுக்கான நிபந்தனை ஜாமீன் கையெழுத்தை ஒரே காவல் நிலையத்தில் போடுவதற்கு ஏதுவாக உத்தரவிட வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை: பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அப்போது, அவர் மீது வேறு சில குற்றச்சாட்டுகளுக்காகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குறிப்பாக, சவுக்கு சங்கரை கைது செய்தபோது அவரது காரில் கஞ்ச இருந்ததாக தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசாரும் வழக்கு ஒன்றை பதிந்தனர். இதனையடுத்து, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். ஆனால், இதனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இதனிடையே, பல்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கைதாகி மதுரை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதன்படி, சமீபத்தில் அவர் ஜாமீனில் வெளியில் வந்தார். மேலும், அவருக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சவுக்கு சங்கர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “பெண் காவலர்களுக்கு எதிராக பேசியதாக என் மீது கோவை, சென்னை, திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல், கஞ்சா வைத்திருந்ததாக என் மீது தேனியில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் எல்லாம் நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.
இதையும் படிங்க: பிறப்புறுப்பில் 2 கிலோ கட்டி.. சாலையில் சுற்றித்திரிந்த நபருக்கு நேர்ந்தது என்ன?
என் மீது குண்டர் சட்டம் பதிவு செய்து, அதன் கீழாக தமிழக அரசு என்னை சிறையில் அடைத்தது. இதனையடுத்து, அந்த குண்டர் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில் என் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும், பெண் காவலர்களுக்கு எதிராகப் பேசிய வழக்கில் உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்நிலையில், பல்வேறு வழக்குகளில் ஜாமீன் வழங்கி, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் கையெழுத்திட வேண்டும் என்று கீழமை நீதிமன்றம் நிபந்தனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், தற்போது நான் சென்னையில் வசித்து வருகிறேன். இதனால், அனைத்து வழக்குகளிலும் ஒரே காவல் நிலையத்தில் நிபந்தனை கையெழுத்திடும் வகையில், நிபந்தனைகளில் தளர்வு வழங்கி உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பல்வேறு காவல் நிலையங்களில் நிபந்தனை கையெழுத்து போட முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே அவற்றை ஒரே காவல் நிலையத்திற்கு மாற்ற வேண்டும். மேலும் சவுக்கு சங்கர் தற்போது இதய பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ஒரே காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென” என வாதிட்டார்.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சவுக்கு சங்கர் ஒரே காவல் நிலையத்தில் அனைத்து வழக்குகளில் நிபந்தனை கையெழுத்திட கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் மீது எத்தனை வழக்குகள் உள்ளன? எத்தனை வழக்குகளில் அவர் ஜாமீன் மற்றும் எந்த காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்? என்பது குறித்தான தகவல்களை மனுதாரர் தரப்பு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.