மழை பாதிக்கும் இடங்களிலுள்ள கர்ப்பிணிகள் கவனத்திற்கு!
Author: Hariharasudhan16 October 2024, 7:45 pm
வடகிழக்கு பருவமழை காரணமாக, பிரசவத்திற்கு ஒரு வாரம் முன்பாக மருத்துவமனையில் சேர கர்ப்பிணிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை: பிரசவ தேதி ஒரு வாரத்திற்குள் உள்ள கர்ப்பிணிகள், குறிப்பாக மழை நீர் தேங்கும் பகுதிகள் மற்றும் மழையினால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ளவர்களும், தாங்கள் திட்டமிட்டுள்ள மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டும் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பருவகால மழை மற்றும் புயலின் காரணமாக வெள்ளம் ஏற்படும் காலங்களில் கர்ப்பிணித் தாய்மார்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி, மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு ஏற்கனவே
அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும், பிரசவ தேதி நெருங்கிய கர்ப்பிணித் தாய்மார்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, முன்கூட்டியே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரசவம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, வானிலை ஆய்வு மையத்தால் “ரெட் அலர்ட்” அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து மாவட்டங்களிலும், பிரசவ தேதி நெருங்கிய 2,388 கர்ப்பிணித் தாய்மார்கள் அக்டோபர் 10ஆம் தேதியிலும், 3,314 கர்ப்பிணித் தாய்மார்கள் அக்டோபர் 16ஆம் தேதி அன்றும், முன்கூட்டியே பாதுகாப்பு கருதி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பொது சுகாதாரத் துறையின் மூலமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கஸ்தூரி வீட்டையே வீடியோ எடுத்து போட்டுட்டாங்களே : X தளத்தில் மோதும் பிரபலங்கள்!
இதன் தொடர்ச்சியாக, பிரசவ தேதி ஒரு வாரத்திற்குள் உள்ள கர்ப்பிணிகள் குறிப்பாக மழை நீர் தேங்கும் பகுதிகள் மற்றும் மழையினால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ள பகுதிகளில் உள்ளவர்களும், தாங்கள் திட்டமிட்டுள்ள மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டும்.
மேலும், கடைசி நேர காலதாமதத்தை தவிர்க்கும்பொருட்டும், இந்த ஏற்பாட்டினை உடனடியாக மேற்கொள்ள இதன் மூலம் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் வேண்டி கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0