சும்மா ஜாலிக்கு பண்ணோம்.. ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பள்ளி மாணவர்களிடம் விசாரணை!

Author: Hariharasudhan
17 October 2024, 11:49 am

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்களுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு நேற்று பிற்பகலில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர், சென்னை விமான நிலையத்தின் கழிவறையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாகவும், அவைகள் மிகவும் சக்தி வாய்ந்தவைகள் என்றும், இன்னும் சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும் என்று கூறிவிட்டு, இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக அடுத்த சிறிது நேரத்தில் விமான நிலையம் பரபரப்பானது.

இதன்படி, சென்னை விமான நிலைய அதிகாரிகள், விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, அவர்கள் மோப்ப நாய்களுடன் விரைந்து வந்து, சென்னை விமான நிலையத்தின் கழிவறைகள் மற்றும் உள்பகுதிகளில் தீவிரமாக ஆய்வு செய்தனர். ஆனால், வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, தொலைபேசி அழைப்பு புரளி என்றும் தெரிய வந்தது.

இதனையடுத்து, சென்னை விமான நிலைய போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்த செல்போன் எண்ணை கண்டுபிடித்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது, அந்த எண் சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் காவல் நிலையப் பகுதியில் இருந்து வந்தது தெரிய வந்தது. அது மட்டுமல்லாமல், பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் தான் இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, சென்னை விமான நிலைய போலீசாரின் தனிப்படையினர், சேலையூர் பகுதியில் விசாரணை நடத்தி, குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் மற்றும் சேலையூர் அருகே அகரம் தென் பகுதியைச் சேர்ந்த மற்றொரு 11ஆம் வகுப்பு மாணவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து மிரட்டல் விடுக்க பயன்படுத்திய செல்போனையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் பிறகு, இரண்டு மாணவர்களையும் சென்னை விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இதையும் படிங்க : ரெட் அலர்ட் வாபஸ்.. கரையைக் கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

இதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், மாணவர்கள் இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, ஜாலியாக தெரியாமல் செய்து விட்டோம் எனக் கூறியுள்ளனர். மேலும், எங்களை மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சினர். இதை அடுத்து போலீசார் மாணவர்களின் பெற்றோர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பின்பு மாணவர்களை கடுமையாக எச்சரித்தனர். அதோடு அவர்களின் பெற்றோர்களுக்கும் அறிவுரை கூறினர். அதன் பின்பு மாணவர்கள் இருவரிடமும் மன்னிப்பு கடிதங்கள் எழுதி வாங்கிக்கொண்டு, பின்னர் இரு மாணவர்களையும் நேற்று இரவு அவர்களின் பெற்றோர் உடன் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

  • Gautham Menon Talked Openly About Suriya சூர்யா என்னை ரிஜெக்ட் பண்ணி தப்பு செஞ்சுட்டாரு : கௌதம் மேனன் ஆதங்கம்!