எங்கு பார்த்தாலும் சதுரங்க வேட்டை.. இரிடியம் ஆசையில் ரூ.2 கோடி பறிகொடுத்த தொழிலதிபர்!

Author: Hariharasudhan
19 October 2024, 2:42 pm

இரிடியம் தருவதாகக் கூறி 2 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நான்கு பேரை கோவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர்: கேரள மாநிலம், பாலக்காட்டையைச் சேர்ந்தவர் முகமது என்பவரின் மகன் அப்துல்லா அஜிஸ் (55). இவருக்குச் சொந்தமான நிலம் கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியில் உள்ளது. தொழிலதிபரான இவர், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களைச் செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த அபூபக்கர், ஜான் பீட்டர் உள்ளிட்ட சிலர் அப்துல் அஜீசை சந்தித்துள்ளனர்.

அப்போது, தாங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், தங்களுக்கு தெரிந்த நபர்கள் அதிக அளவில் உள்ளனர் என்றும், உங்களது இடங்கள் எதையாவது விற்க வேண்டும் என்றால் தங்கள் மூலம் விற்றுத் தருவதாகவும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அப்துல் அஜீஸ் அவர்களுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். பின்னர் கோவைக்கு வந்த அவர், அபூபக்கர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்தும் பேசி உள்ளார்.

அந்த நேரத்தில், அவர்கள் ஒரு சிறிய பாத்திரத்தில் இரிடியும் போன்ற ஒரு பொருளைக் காண்பித்து உள்ளனர். இது 100 சதவீதம் சக்தி வாய்ந்தது என்றும், இதனுடைய விலை இரண்டு கோடி ரூபாய் என்றும் கூறி இருக்கின்றனர். இதனை வாங்கி உடனே விற்றால், 10 கோடி ரூபாய் நமக்கு லாபம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தைகளைக் கூறி உள்ளனர். இதைத் தொடர்ந்து, அப்துல் அஜீஸ் இரண்டு கோடி ரூபாயை அபூபக்கர், ஜான் பீட்டர் உள்ளிட்ட சிலரிடம் கொடுத்து உள்ளார்.

இதையும் படிங்க : ஒரே நாளில் அதிரடி ரெய்டு.. சிக்கிய 329 கிலோ ‘பொருள்’

ஆனால், அதன் பிறகு அவர்கள் அந்த பொருளையும் கொடுக்காமல், கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர். இதனையடுத்து, அப்துல் அஜீஸ் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் அபூபக்கர், ஜான் பீட்டர், செந்தில்ராஜ், ஜனகன், ஜோதிராஜ், அனில் குமார் உட்பட அவர்களது கூட்டாளிகள் என 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். மேலும், மூன்று பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!