விழுப்புரம் நாதகவுக்கு பலத்த அடி.. தமிழ்த்தாய் வாழ்த்தை தேடும் சீமான்!

Author: Hariharasudhan
21 October 2024, 4:53 pm

விழுப்புரம் மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் மணிகண்டன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கரூர்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் செயல்பட்டு வருகிறார். இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான பிரபாகரனை மையக் கருத்தியலாகக் கொண்டு இயங்கும் இந்த கட்சியானது, இதுவரை நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும் தனித்து நின்றே போட்டியிட்டுள்ளது.

அதேநேரம், இக்கட்சிக்கு எந்த ஒரு சீட்டும் கிடைக்கவில்லை என்றாலும், கணிசமான எண்ணிக்கையில் வாக்கு சதவீதமும் உயர்ந்து வருகிறது. இதனிடையே, சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர்.

குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், மண்டல நிர்வாகி கரு பிரபாகரன் தலைமையில் விலகுவதாக அறிவித்தனர். இதனை அடுத்து, விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் சுகுமார், விழுப்புரம் மேற்கு மாவட்டச் செயலாளர் பூபாலன் ஆகியோரும் நாம் தமிழர் கட்சியிலிருந்து தங்களை விளக்கிக் கொள்வதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் தான், அதை விழுப்புரம் மாவட்டத்தின் மத்திய மாவட்டச் செயலாளர் மணிகண்டனும் நாம் தமிழர் கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இது நாம் தமிழர் கட்சியின் மீதான பெயருக்கு பெரும் அடியாக விழுந்து உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: கைகோர்த்த ஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு.. தென் மாநிலங்களில் இப்படி ஒரு நிலையா?

மேலும், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இணைய உள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன. மேலும், இவ்வாறு அவர்கள் இணையவிருந்தால், வருகிற அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே, வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் தங்களை இணைத்துக் கொள்வர் என்றும் கூறப்படுகிறது.

இந்த கட்சி மாநாட்டில் பல்வேறு முக்கிய கட்சிகளைச் சேர்ந்த பிரதான பிரமுகர்கள் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகியது, சீமானின் கட்சிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “பாரதிதாசன் எழுதிய புதுச்சேரி வாழ்த்துப் பாடல் எவ்வளவு அழகாக இருக்கிறது. நான் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டிலும் அந்த வாழ்த்தைக் கொண்டு வருவேன். இதனால் இரு மாநிலங்களுக்கும் ஒரே தமிழ்த்தாய் வாழ்த்தாக அது அமையும்” என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி விடுவேன் என கூறியது சர்ச்சையான நிலையில், மீண்டும் அதே போன்ற ஒரு கருத்தை சீமான் கூறியுள்ளது அரசியல் மேடையில் பேசு பொருளாகியுள்ளது.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 149

    0

    0