படுத்த உடனே நல்ல தூக்கம் வரணும்னு நினைச்சா தூங்குறதுக்கு முன்னாடி இதெல்லாம் தொட்டுகூட பார்க்காதீங்க!!!

Author: Hemalatha Ramkumar
22 அக்டோபர் 2024, 10:57 காலை
Quick Share

நம்முடைய உடல் ஆரோக்கியம் மற்றும் மனநலம் ஆகிய இரண்டுக்கும் நல்ல தரமான தூக்கம் பெறுவது அவசியம். நீங்கள் போதுமான அளவு தூங்கா விட்டால் அதனால் நாள் முழுவதும் சோர்வாகவும், மன அழுத்தமாகவும் உணர்வீர்கள். இன்றைய நவீன உலகில் இந்த பிரச்சனை இளைஞர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. மன அழுத்தம் முதல் அன்றாட வழக்கத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் வரை பல காரணங்களை இதற்கு சொல்லிக் கொண்டே போகலாம். இது மாதிரியான ஒரு சூழலில் நல்ல தூக்கத்தை பெறுவதற்கு நீங்கள் ஒரு சில விஷயங்களை செய்ய வேண்டும். அந்த வகையில் இரவு தூங்குவதற்கு முன்பு நீங்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

காஃபின் கலந்த பொருட்கள் 

டீ, காபி, கோலா மற்றும் ஒரு சில சாக்லேட்டுகளில் காஃபின் இருப்பதால் இது உங்களை ஆக்டிவாக வைத்து, தூங்குவதை தாமதப்படுத்தலாம். எனவே படுக்கைக்கு செல்வதற்கு குறைந்தபட்சம் 4 முதல் 6 மணி நேரத்திற்கு முன்பு இந்த மாதிரியான உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். 

காரமான உணவுகள்

காரமான உணவுகள் உங்களுடைய செரிமானத்தை பாதித்து வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தலாம். இதனால் உங்களுக்கு தூங்குவதில் சிக்கல் உருவாகும். ஆகவே தூங்குவதற்கு முன்பு காரமான அல்லது அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். 

இதையும் படிக்கலாமே: குளிரடிக்கும் மழையில் வயிற்றுக்கு இதமா கமகமன்னு ரசம் சாதம் செய்து கொடுத்தால் யார் தான் வேண்டாம்னு சொல்லுவாங்க!!!

இனிப்புகள் 

இனிப்புகள், சாக்லேட் வகைகள் மற்றும் இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் ஆகியவற்றில் அதிக சர்க்கரை அளவு இருக்கும். இதனால் உங்களுடைய ஆற்றல் அளவுகளில் திடீர் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். இதனால் உங்களால் தூங்க முடியாது. 

மதுபானம் 

இரவு படுப்பதற்கு முன்பு மதுபானம் அருந்துவது உங்களுக்கு விரைவாக தூக்க கலக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் உங்களுடைய தூக்கத்தின் தரம் இதனால் பாதிக்கப்படும். மேலும் நடு இரவில் விழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். 

ப்ரோட்டீன் அதிகம் உள்ள உணவுகள் 

இறைச்சி, மீன் மற்றும் முட்டைகள் போன்ற புரதம் அதிகமாக உள்ள உணவுகளை செரிமானம் செய்ய உங்கள் உடல் அதிகம் வேலை செய்ய வேண்டி இருக்கும். எனவே தூங்குவதற்கு முன்பு இந்த மாதிரியான உணவுகளை தவிர்ப்பது நல்லது. 

கொழுப்பு நிறைந்த உணவுகள் 

பொரித்த உணவுகள், சீஸ் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் போன்றவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் உங்களுக்கு வயிற்றில் அசௌகரியம் ஏற்படலாம். ஆகவே படுக்கைக்கு செல்வதற்கு முன்பு இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள். 

தண்ணீர் 

தூங்குவதற்கு முன்பு அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருகுவதால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் உங்களுடைய தூக்கத்தின் தரம் பாதிக்கப்படும். ஆகவே தூங்குவதற்கு ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் பருகுவது நல்லது.

தரமான தூக்கத்தை பெறுவதற்கு சில டிப்ஸ்

*தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்கு செல்வது அவசியம். 

*தூங்குவதற்கு முன்பு மொபைல், கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். 

*தூங்குவதற்கு முன்பு புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். 

*உங்களுடைய படுக்கையறை அமைதியாக, இருட்டாக மற்றும் குளுமையாக இருப்பது உறுதி செய்யுங்கள். 

*தினமும் உடற்பயிற்சி செய்வது உங்களுடைய உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். 

*ஒருவேளை தூங்குவது உங்களுக்கு அதிக சிரமமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • விவசாயிகளால் விஜய்க்கு சிக்கல்? தவெக மாநாட்டிற்கு ரூல்ஸ்!
  • Views: - 61

    0

    0

    மறுமொழி இடவும்