இவ்வளவு நாள் எங்கப்பா இருந்தீங்க.. எஸ்ஏசி – ஆனந்த்.. விறுவிறுப்படையும் தவெக மாநாடு!
Author: Hariharasudhan24 October 2024, 7:47 pm
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சிறப்பு தரிசனம் மேற்கொண்டுள்ளார்.
சென்னை: இன்னும் ஒரு படத்தை மட்டுமே கையில் வைத்திருந்தாலும், 250 கோடி ரூபாய் ஊதியம் கேட்டாலும் கொடுக்கத் தயார் என தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்று கொண்டிருப்பதாக சினிமாத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு உச்சத்தில் உள்ள நடிகர் விஜய், இவை அனைத்தையும் விட்டுவிட்டு பொது வாழ்விற்கு ஆயத்தமாகி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கட்சிக் கொடி, கட்சிப் பாடல் என அனைத்தையும் வெளியிட்டாலும், விஜயின் முதல் அரசியல் மேடையாக அமைய இன்னும் இரண்டே நாட்கள் மட்டுமே உள்ளது.
ஆம், வருகிற 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் சுமார் 2 மணி நேரம் விஜய் உரையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் அடிக்கடி வந்து பார்வையிட்டுச் செல்கிறார்.
அந்த வகையில், இன்று மாநாடு நடைபெறும் இடத்தில் நடைபெறும் பணிகளைப் பார்வையிடுவதற்காக ஆனந்த் வந்தார். அப்போது, “சுமார் 10 ஆயிரம் விஜய் ரசிகர்கள், மாநாட்டின் முன்களப் பணியாளர்களாக பணியாற்ற உள்ளனர். மேலும், 150 மருத்துவர்கள் தயார் நிலையில் எப்போதும் இருப்பர்” எனத் தெரிவித்தார்.
இது ஒருபுறம் இருக்க, விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், சென்னை கொரட்டூரில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு தனது மனைவி ஷோபா சந்திரசேகர் உடன் வந்தார். அங்கு விஜய் ரசிகர்கள், தவெக மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்காக ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் மாநாடு சிறப்பாக அமைய வேண்டும். எங்கள் தளபதிக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும். பெரிய நிலைமைக்கு அவர் வர வேண்டும். தமிழ்நாட்டிற்கு பொக்கிஷம் கிடைக்க வேண்டும். இதை வலியுறுத்தி தவெக தொண்டர்கள் நமது சாய்பாபா கோயிலில் அன்னதானம் செய்துள்ளனர்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: தலைவலியாகும் தவெக மாநாடு.. என்னதான் செய்கிறார் விஜய்?
மேலும், இந்த மாநாட்டில் விஜய் ஏற்ற உள்ள நூறடி உயரக் கொடி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதே இடத்தில் பறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், மணி என்ற விவசாயியிடம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, தவெக மாநாடு நடைபெறும் இடத்தில் கடலுர் எஸ்பி ராஜாராம், விழுப்புரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தா, விக்கிரவாண்டி காவல் துணை கண்கானிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்டோர், நடைபெற உள்ள மாநாட்டுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என இன்று ஆய்வு மேற்கொண்டனர்.