சென்னையில் நடத்துநர் கொலை.. இறுதிச்சடங்கிற்காக வந்தவருக்கு சிறை!

Author: Hariharasudhan
25 October 2024, 12:10 pm

சென்னையில் டிக்கெட் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டு நடத்துநர் உயிரிழந்த நிலையில், பயணி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ஜெகன்குமார். இவர் சென்னையில் உள்ள சின்னமலை பகுதியில் வசித்து வருகிறார். இவர், பெருநகர சென்னை மாநகரப் பேருந்து கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று (அக்.24) எம்கேபி நகர் முதல் கோயம்பேடு வரை செல்லும் பேருந்தில் ஜெகன் நடத்துநராகப் பணியாற்றியுள்ளார். அப்போது, பாரதி நகரில் இருந்து புறப்பட்ட பேருந்து, அண்ணா வளைவு பேருந்து நிறுத்தம் வந்தது.

அங்கு வேலூரைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் முன் படிக்கட்டு வாயிலாக ஏறியுள்ளார். இதனால், பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஜெகன்குமார், கோவிந்தனிடம் டிக்கெட் எடுக்குமாறு கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு பின்னர் வாக்குவாதமாக மாறிய நிலையில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நடத்துநர் ஜெகன்குமார், டிக்கெட் கொடுக்கும் மெஷினை வைத்து அந்த பயணியைத் தாக்கியதாகவும், இதனால் அவரது தலையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, மேலும் ஆந்திரமடைந்த அந்தப் பயணி ஜெகன்குமாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் நிலைகுலைந்த ஜெகன்குமார், பேருந்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். பின்னர், உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு ஜெகன்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து, சிகிச்சை பெற்று வரும் கோவிந்தனை கைது செய்த போலீசார், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவத்தின் போது கோவிந்தன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம், தற்போது கைதாகியுள்ள கோவிந்தன், தனது உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கிற்காக சென்னை வந்துள்ளார். பின்னர், அங்கிருந்து கோயம்பேடு சென்று, பேருந்து மூலம் தனது சொந்த ஊருக்கு புறப்படுவதற்காகச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: வெளுத்து வாங்கும் கனமழை.. கரையைக் கடந்தது டானா புயல்!

ஆனால் கோயம்பேடு செல்லும் முன்பே, நடத்துநருடன் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த நிலையில், அவர் கைதாகி உள்ளார். அதேநேரம், இதில் உயிரிழந்த நடத்துநர் ஜெகன்குமாருக்கு 10 மற்றும் 8ஆம் வகுப்பு படிக்கும் இரு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!