சாப்பிடும் போது தண்ணீர் குடிச்சா செரிமானம் ஒழுங்கா நடைபெறாதுன்னு சொல்றாங்களே… அது உண்மையா…???

Author: Hemalatha Ramkumar
25 அக்டோபர் 2024, 3:44 மணி
Quick Share

செரிமான ஆரோக்கியத்தை பற்றி பேசும்போது பல்வேறு விதமான கட்டுக் கதைகள் மற்றும் தவறான புரிதல்கள் நிலவி வருகிறது. உணவுடன் அல்லது உணவு சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது வயிற்றில் உள்ள செரிமான அமிலங்களை கரைத்து உணவு உடைக்கப்படுவதை தடுத்து, அதனால் வயிற்று உப்புசம் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது அப்படியான ஒரு கட்டுக்கதை தான். ஆனால் உண்மையில் தண்ணீர் குடித்தாலும் கூட அதன் வேலையை சரியாக செய்யும் வகையில் தான் வயிற்றில் உள்ள அமிலங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் குடிப்பது என்பது போதுமான நீர்ச்சத்தை பராமரிக்கவும் மற்றும் குறிப்பாக செரிமானத்திற்கு உதவவும் மிகவும் அவசியம். 

நம்முடைய வயிறு முதன்மையாக ஹைட்ரோ குளோரிக் ஆசிட் என்ற காஸ்ட்ரிக் அமிலத்தை உற்பத்தி செய்கிறது. உணவை உடைப்பதில் இந்த அமிலம் முக்கிய பங்கு கொண்டுள்ளது. இது  செரிமான என்சைம்களை ஆக்டிவேட் செய்து, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. வயிற்றில் உள்ள சூழல் அதிக அமிலத்தன்மை கொண்டதாக இருக்கும். அதாவது இதனுடைய pG அளவு 1.5 முதல் 3.5 வரை இருக்கும். இது செரிமானம் சிறந்த முறையில் நடைபெறுவதற்கு மிகவும் அவசியம். 

இதையும் படிக்கலாமே: வைட்டமின் D குறைவாக இருந்தால் உடல் அதனை நம்மிடம் எப்படி தெரிவிக்கும்…???

வயிற்றில் உள்ள அமிலம் Vs தண்ணீர் 

வயிறு என்ற தசையாலான உறுப்பு அதிக அளவிலான உணவு மற்றும் தண்ணீரை வைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் எதையாவது சாப்பிட்டாலோ அல்லது குடித்தாலோ நம்முடைய வயிறு வரக்கூடிய அந்த பொருளை ஏற்பதற்கு தோதாக விரிவடையும். அதே போல தண்ணீர் வயிற்றுக்குள் நுழையும் போது அது வயிற்றில் உள்ள பிற பொருட்களோடு கலக்கிறது. ஆனால் அது வயிற்றின் அமிலத்தில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. 

அமில சூழலை பராமரிப்பதில் வயிறு குறிப்பிடத்தக்க திறனை கொண்டுள்ளது. வயிற்றில் உணவு இருந்தால் அதிக கேஸ்ட்ரிக் அமிலம் உற்பத்தி தூண்டப்படும். இதன் மூலமாக செரிமானத்திற்கு தேவையான pH அளவு மீட்டெடுக்கப்படும்  தண்ணீர் குடிப்பதால் தற்காலிகமாக வயிற்றில் உள்ள பொருட்களின் அளவு அதிகரிக்கலாமே தவிர அதனால் அமிலத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது. கேஸ்ட்ரிக் அமிலத்தின் உற்பத்தி என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. அது உடலின் தேவைகளை பொறுத்து தகவமைத்துக் கொள்ளும். 

செரிமானத்தில் தண்ணீரின் பங்கு என்ன? 

நீர்ச்சத்து என்பது செரிமான ஆரோக்கியம் உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியம். உணவுக்கு முன்பு, உணவின்போது மற்றும் உணவுக்குப் பிறகு தண்ணீர் குடிப்பது பல்வேறு வகையில் செரிமானத்திற்கு உதவுகிறது. ஊட்டச்சத்துக்கள் கரைவதற்கும், வயிற்றில் என்சைம் செயல்முறை சிறந்த முறையில் நடைபெறுவதற்கும் தண்ணீர் அவசியம். செரிமான அமைப்பு சுமூகமாக செயல்படுவதற்கு தண்ணீரே காரணம். தண்ணீர் மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது. மேலும் செரிமானத்திற்கு பிறகு நம்முடைய உடல் முழுவதும் ஊட்டச்சத்துக்கள் கொண்டு சேர்க்கப்படுவதற்கு தண்ணீர் உதவுகிறது. 

உணவின்போது தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன? 

தண்ணீர் குடிப்பது உணவை மென்மையாக்கி வயிறு அதனை உடைப்பதற்கு மிகவும் எளிதானதாக மாற்றுகிறது. தண்ணீரானது உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை அளித்து நீங்கள் அதிகப்படியாக சாப்பிடுவதை தவிர்க்க உதவுவதால் உங்கள் உடல் எடை சீராக பராமரிக்கப்படும். ஒருவேளை உங்களுக்கு தொடர்ச்சியாக செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் ஒரு மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

  • இனி விமர்சனம் அதிகமாகும்.. விஜய் கடிதம்
  • Views: - 80

    0

    0

    மறுமொழி இடவும்