லேட்-நைட்ல வொர்க்அவுட் பண்றது நல்லதா… கெட்டதா… ஆராய்ந்து பார்த்திடுவோமா!!! 

Author: Hemalatha Ramkumar
25 அக்டோபர் 2024, 4:49 மணி
Quick Share

விரைவாக நகர்ந்து கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கையில் பலருக்கு பகல் நேரத்தில் வொர்க்அவுட் செய்வது சவாலாக அமைவதால் அவர்கள் லேட்நைட் வொர்க் அவுட் செஷனை தேர்வு செய்கிறார்கள். இரவு நேரத்தில் வொர்க் அவுட் செய்வதால் நம்முடைய உடலுக்கு சில தனித்துவமான பலன்கள் கிடைக்கிறது என்றாலும் தூங்குவதற்கு முன்பு உடற்பயிற்சி செய்வது ஒரு நல்ல யோசனையா? 

பகல் நேரம் முழுவதும் வேலை செய்துவிட்டு தங்களுக்கு சௌகரியமான இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்வதை ஒரு சிலர் விரும்பினாலும் இது ஒருவருடைய தூக்கத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற கேள்வி இங்கு எழுகிறது. உடற்பயிற்சி என்பது பொதுவாக நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியம், மனநிலை மற்றும் ஆற்றல் அளவுகளை அதிகரிக்கிறது. ஆனால் நீங்கள் உடற்பயிற்சியை செய்வதற்கான நேரம் அதன் மூலமாக கிடைக்கும் விளைவுகளில் குறிப்பிடத்தக்க பங்கு கொண்டுள்ளது. எனவே லேட்நைட் ஒர்க் அவுட் செய்யும் நபர்கள் இது குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களைப் பற்றி இப்போது பார்ப்போம். 

இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள்:-

மாலை நேரத்தில் நம்முடைய உடல் வெப்பநிலை அதன் உச்சத்தில் இருக்கும் காரணத்தினால் தசைகளின் நெகிழ்வுத் தன்மை மற்றும் வலிமை அதிகமாக இருக்கும். இதனால் நீங்கள் காலை நேரத்துடன் ஒப்பிடும் பொழுது இரவு நேர உடற்பயிற்சியில் சிறப்பாக செயல்படுவீர்கள். 

பகல் முழுவதும் கடுமையாக வேலை செய்துவிட்டு இரவு நேரத்தில் நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது உங்களுடைய உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்கள் வெளியிடப்படும். இது உங்களுடைய மனநிலையை மேம்படுத்தி, பதட்டத்தை குறைத்து, உங்களுக்கு ஓய்வை அளிக்கும். 

இதையும் வாசிக்கலாமே: சாப்பிடும் போது தண்ணீர் குடிச்சா செரிமானம் ஒழுங்கா நடைபெறாதுன்னு சொல்றாங்களே… அது உண்மையா…???

மாலை நேர வொர்க் அவுட் செய்யும் போது தசைகள் குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. பகல் பொழுதில் உங்களுடைய ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இதனால் உடற்பயிற்சியின் போதும் உடற்பயிற்சி செய்த பிறகும் தசைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் கொண்டு சேர்க்கப்படும் செயல்முறை விரைவாக நடைபெறும். 

இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள்:- 

இரவு நேரத்தில் உடற்பயிற்சி உங்களுடைய தூக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். உடற்பயிற்சியின் போது நம்முடைய உடலில் எச்சரிக்கை மற்றும் ஆற்றல் அளவுகளை அதிகரிப்பதற்கு காரணமான அட்ரினலின் மற்றும் கார்டிசால் போன்ற ஹார்மோன்கள் வெளியிடப்படுகிறது. இதனால் உங்களுக்கு தூக்கம் வராமல் போகலாம். 

கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு உடல் அதன் தசைகளை மீட்டெடுக்க தேவையான ஊட்டச்சத்துக்களை தேடும். இதனால் உங்களுக்கு இரவு நேரத்தில் பசி அதிகரிக்கலாம். மேலும் இதனால் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு அதிக அளவு அல்லது ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட வாய்ப்புள்ளது. 

பகல் முழுவதும் வேலை செய்ததால் நீங்கள் சற்று சோர்வாக காணப்படுவீர்கள். இதனால் இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் போது கவன குறைவு காரணமாக காயங்கள் ஏற்பட சாத்தியங்கள் உள்ளது.

இரவு நேரத்தில் வொர்க் அவுட் செய்யும் போது நீங்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்:- 

*உடற்பயிற்சி செய்த பிறகு உடலை குளுமைப்படுத்தவும், அமைதிப்படுத்தவும் போதுமான நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். 

*லேசான நீட்சி பயிற்சிகள் அல்லது யோகா போன்றவை உங்களுடைய இதயத்துடிப்பை குறைத்து, தூக்கத்திற்கு உங்களை தயார்படுத்தும். 

*உடற்பயிற்சி முடித்த பிறகு புரோட்டீன் அதிகம் உள்ள ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிடுங்கள். இது உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும். 

*வொர்க் அவுட் மற்றும் தூங்குவதற்கு இடையே போதுமான நேரம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

*தூங்குவதற்கு முன்பு புத்தகம் வாசிப்பது அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது போன்றவற்றை செய்வது நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.

  • இனி விமர்சனம் அதிகமாகும்.. விஜய் கடிதம்
  • Views: - 100

    0

    0

    மறுமொழி இடவும்