தம்பியால் அண்ணனை விளாசும் நெட்டிசன்கள்.. தவெக மாநாட்டில் அஜித்!

Author: Hariharasudhan
26 October 2024, 12:56 pm

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பெரியார் கட் அவுட் வைக்கப்பட்டுள்ள நிலையில், சீமான் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

விழுப்புரம்: தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விஜய், தான் பிரபலம் ஆன பிறகு ரசிகர் மன்றம் தொடங்கினார். பின்னர் அது நற்பணி மன்றமாக மாறி, விஜய் மக்கள் இயக்கம் என மாறியது. இதனால் விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல் மேடைகளிலும் எழுந்தது. ஆனால், அதற்கு பதில் சொல்லாமல் மறைமுகமாகவே விஜய் கூறி வந்தார்.

இந்த நிலையில் தான், கடந்த பிப்ரவரியில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அப்போது, தான் கமிட் ஆகி உள்ள கடைசிப் படத்தில் நடித்துவிட்டு, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் என்பதே தமது இலக்கு என தெளிவாகத் தெரிவித்திருந்தார் விஜய். இதனையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சிக் கொடி மற்றும் பாடலை வெளியிட்டார். இதில் கட்சிக் கொடியில் இடம் பெற்றுள்ள யானைகள், பகுஜன் சமாஜ் கட்சியின் கேள்விகளுக்கு உள்ளாகியுள்ளது.

இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை (அக்.27), விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. மேலும், இந்த மாநாட்டில் இடம் பெற்றுள்ள கட் – அவுட் கவனம் பெற்றுள்ளது. காரணம், புதிதாக கட்சியைத் தொடங்கி உள்ள விஜய், தனது தவெக கொள்கைகள், கொடி விளக்கம் ஆகியவற்றை மாநாட்டில் தெரிவிப்பதாகக் கூறி இருந்தார்.

இந்த நிலையில், தமிழன்னை, சேரர், சோழர், பாண்டியர், வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், பி.ஆர்.அம்பேத்கர், அஞ்சலையம்மாள் ஆகியோரின் கட் அவுட்கள் மாநாட்டுத் திடலில் பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளன. இதில் பெரியார் மற்றும் அம்பேத்கர் இடையே விஜய் கட் அவுட்டும் வைக்கப்பட்டுள்ளது. எனவே, இதில் இருந்தே விஜயின் கொள்கைகள், அரசியல் பாதை ஆகியவை தெரிவதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியிருந்தார்.

இந்த நிலையில், பெரியார் கட் அவுட் வைக்கப்பட்டுள்ள நிலையில், சீமான் பெரியார் பற்றி பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகிறது. அதில், அவர் பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரியார் முக்கிய பங்கு வகித்தவர் என புகழாரம் சூட்டியிருப்பார். ஆனால், சமீப காலங்களில் அவரது கருத்துக்கள் இதற்கு மாறாக உள்ளதாக அவரது பேட்டிகளில் தெரிய வருகிறது. எனவே, இதனை வைத்து சீமானை நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க : ஜல்லிக்கட்டு கூட்டத்தை விட விஜய் மாநாட்டுக்கு அதிக கூட்டம் : கலாய்க்கிறாரோ? வெளியான வீடியோ!

இதனிடையே, சினிமாவில் சக நடிகராகவும், உச்சத்தில் இருப்பவருமான அஜித்குமாரின் பேனர்களும் தவெக மாநாட்டில் இடம் பெற்றுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. அதில், ‘தல ரசிகன் தளபதி தொண்டன்’ என்ற வாசகத்தோடு வீரம் பட அஜித்குமார் கெட்டப் மற்றும் வேஷ்டி சட்டையில் விஜய் இருக்கும்படியான பேனரும் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், மாநாடு நடைபெறும் வழிநெடுகிலும் விஜயை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 497

    0

    0