30 ஆண்டுகளுக்கு பின் தத்தளித்த தூங்கா நகரம் : தூங்கியது யார்?

Author: Udayachandran RadhaKrishnan
26 அக்டோபர் 2024, 8:00 மணி
mad
Quick Share

மதுரை மாநகரில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதியான பி.பி.குளம், முல்லை நகர் பகுதிகளில், ஆலங்குளம் கண்மாய் நீர் நிரம்பி தெருவுக்குள் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்பு பகுதிகள் முழுவதிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அங்குள்ள பொதுமக்கள் அவசர அவசரமாக உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினர்.

ஆலங்குளம் கண்மாய் நிரம்பி வெளியேறிய வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். முல்லைநகர் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அந்தப் பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டித் தீர்த்ததால் தெருக்களில் ஆறு போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் வீடுகள் இடிந்து விடும் என்ற அச்சம் ஏற்பட்டது.

இரவு நேரம் என்பதால் தங்குவதற்கு கூட இடமின்றி வீடுகளுக்குள் தண்ணீரில் தத்தளித்தனர். மதுரை ஆலங்குளம் கண்மாய் ஏற்கனவே நிரம்பி வருவதால் கரை பகுதிகளை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில், தொடர்ந்து முல்லை நகர் பகுதி முழுவதிலும் நீரில் மூழ்கியதால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

முல்லை நகர் பகுதியில் தொடர்ந்து வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து வரும் நிலையில் அதிகாரிகளும் எம்எல்ஏ உள்ளிட்ட யாரும் தங்களை கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

அதேபோல் மதுரை மாநகராட்சி 10வது வார்டு பகுதியான பாரத் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் குடியிருப்புகள் மூழ்கியது. ஒவ்வொரு பகுதிகளிலும் இடுப்பு அளவிற்கு தண்ணீர் தேங்கிய நிலையில், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்திற்கு ஆளாகினர்.

70 ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கனமழையால தூங்கா நகர் மக்கள் தூக்கம் தொலைத்தனர். பாரத் நகர் பகுதியில் கண்மாய் ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறி பலமுறை அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் திடீரென பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் ஓடைகளில் இருந்து வெளியேறிய வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தது. பாரத் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், மதுரை முல்லை நகரில், மழை தேங்கிய பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:, மதுரையில் தண்ணீரில் தவிக்கும் மக்களுக்கு நான்கு பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 15 இடங்களில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு இரவு உணவு வழங்கப்பட உள்ளது. மழை தொடரும் பட்சத்தில் கூடுதலாக இடம் ஓதுக்கப்பட்டு மக்களை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
மதுரை மாநகரில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக முல்லை நகர் பகுதி நீரில் மூழ்கியுள்ள நிலையில், ஆலங்குளம் கண்மாய் நிரம்பி தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் குடியிருப்புகள் வெள்ள நீரில் மூழ்கியது.

இந்த நிலையில், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி மற்றும் மதுரை ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் களத்தில் இறங்கி பணி செய்து வருகின்றனர்.இருந்த போதும், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லூர் பகுதியில் உள்ள கட்டபொம்மன் நகர், பாண்டியன் நகர், டீச்சர்ஸ் காலனி மற்றும் மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு அங்குள்ள பல்வேறு தெருக்களில் தண்ணீர் இன்னும் வடியாத நிலை உள்ளது.

மழை பெய்தால் இப்பகுதியில் கடுமையான பாதிப்புக்கு ஆளாகும் என்ற அச்சம் பொது மக்களிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த ராஜி, செல்லூர் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி விஜயகாந்த், ஜோதி ஆகியோர் கூறியதாவது: இப்பகுதியில் நேற்று பெய்த மழையினால் மட்டுமே வெள்ளநீர் தேங்கியது என்று சொல்வது மிக தவறு. கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் சாதாரணமாக பெய்த மழைக்கே இப்பகுதியில் தண்ணீர் தேங்கியது. தற்போது இன்னும் கூடுதலாக தண்ணீர் தேங்கி மிக கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளோம்.

70 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது.
இதற்கு மதுரை மாநகராட்சி செய்ய வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு முறை நாங்கள் புகாராகவும் தெரிவித்தும் கூட எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மருந்து வழங்குவது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே நாங்கள் கருதுகிறோம்.ஆகையால், உடனடியாக மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகமும் தலையிட்டு எங்கள் பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என வேண்டுகோள் விடுகிறோம் ,என்றனர்.
பருவமழையிலிருந்து மக்களை பாதுகாத்திருக்க வேண்டிய மதுரை மாநகராட்சி, அனைத்து பாதிப்புகளையும் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எப்படி கூறியிருப்பதாவது;
மதுரை மாநகரில் நேற்று பகலில் 10 நிமிடங்களில் 4.5 செ.மீ அளவுக்கும், மொத்தமாக 11 மணி நேரத்தில் 10 செ.மீ அளவுக்கு மழை பெய்த நிலையில், மாநகரத்தின் பெரும்பான்மையான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. பல பகுதிகளில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் தீவாக மாறியிருப்பதால் அங்குள்ள மக்கள் பால் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கூட கிடைக்காமலும், குளங்களாக மாறி விட்ட வீடுகளை விட்டு வெளியேற முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு அரசின் சார்பிலும், மாநகராட்சி சார்பிலும் இதுவரை உணவு உள்ளிட்ட அடிப்படை உதவிகள் கூட வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

10 நிமிடங்களில் 4.5 செ.மீ அளவு மழை என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்று தான் என்றாலும் கூட, காலநிலை மாற்றத்தின் விளைவாக இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நடக்கும் என்பதை கணித்து, எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள வசதியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசும், மாநகராட்சியும் மேற்கொண்டிருக்க வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மழை நீரை வைகை ஆற்றுக்கு கொண்டு செல்வதற்கான பந்தல்குடி கால்வாய் உள்ளிட்ட பல கால்வாய்களை அரசும், மாநகராட்சியும் தூர்வாரியிருக்க வேண்டும்.

ஆனால், தூர்வாரியதாக கணக்கு காட்டப்பட்டாலும் கூட களத்தில் எந்தப் பணியும் நடக்கவில்லை. இதில் தமிழக அரசும், மாநகராட்சியும் படுதோல்வி அடைந்து விட்டன.
அதனால் தான் மழை நீரை வைகைக்கு கொண்டு செல்ல வேண்டிய பந்தல்குடி கால்வாய் குடியிருப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்று விட்டது. ஏற்கனவே பெய்த மழையுடன், கால்வாய்கள் நிரம்பியதால் ஊருக்குள் புகுந்த தண்ணீரும் சேர்ந்து கொண்டதால் தான் மழை – வெள்ள பாதிப்பு மிக அதிகமாகியிருக்கிறது. இவை அனைத்திற்கும் தமிழக அரசும், மதுரை மாநகராட்சியும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்; சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் கூட, போதிய நிதி இல்லை என்று கூறி எந்தப் பணியையும் மாநகராட்சி செய்யவில்லை. பருவமழையிலிருந்து மக்களை பாதுகாத்திருக்க வேண்டிய மதுரை மாநகராட்சி, அனைத்து பாதிப்புகளையும் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருக்கிறது.

அரசின் செயல்பாடின்மைக்கு இதைவிட மோசமான எடுத்துக்காட்டு இருக்க முடியாது.
மதுரையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அரசும், மாநகராட்சியும் உடனடியாக வழங்கப்பட வேண்டும். மழை நீரை வடியச் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன், எதிர்காலத்தில் இத்தகைய பாதிப்புகளைத் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் வசதியாக மதுரை மாநகராட்சிக்கு போதிய நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் மூர்த்தி பேசும்போது: எதிர்பாராமல் வந்த மழையை நாங்கள் எதிர்பார்த்து பணிகள் செய்துள்ளோம். பந்தல்குடி கால்வாயில் வந்த தண்ணீர் வைகைஆற்றுக்குச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் அறிவிக்கும் முன்பே கலெக்டர் சங்கீதா பணிகளை மேற்கொண்டு தண்ணீர் வெளியேறி செல்வதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

பந்தல்குடி கால்வாயில் உள்ள மூன்று ட்ரான்ஸ்பார்மர்கள் மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலைக்குள் தண்ணீர் அனைத்தும் வடிவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் மழை பெய்தாலும் தாங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது, என அசால்டாக பதில் அளித்தார்.

இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது : வைகை நதியின் ஓரத்தில் தூங்கா நகரம் என்று பெயர் பெற்ற மதுரையில் மக்கள் தூங்காமல் தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர். தேமதுரை தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகையில் செய்ய வேண்டுமென்பதை போல அனைத்து சமூக வலைதளங்களிலும் இந்த விஷயம் வைரலாகி வருகிறது.

இது மதுரைக்கு வந்த சோதனையா என கேட்கும் அளவுக்கு மக்களுக்கு வேதனை அதிகரித்துள்ளது. அனைத்து கால்வாய்களும் கண்மாய்களுக்குச் செல்லும் நீர் நிலைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தண்ணீர் செல்ல வழி இல்லாததால் அது வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அமைச்சர் மூர்த்தியின் பதிலால் மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். பொறுப்புள்ள அமைச்சர் பொறுப்பில்லாமல் பதில் சொல்வது நியாயமா என்ற கேள்வி விடுத்துள்ளனர்.

மிகப்பெரிய வைகை ஆறு இருந்தும் தண்ணீரை கடத்துவதற்கு சரியான திட்டமிடல் மதுரை மாநகரில் இல்லை. மதுரையின் மையத்தில் மீனாட்சி கோவிலை வைத்து நான்கு மாட வீதி நகரை அமைத்த பெருமை பாண்டிய மன்னர்களை சாரும். ஆனால் தற்போதுள்ள ஆட்சியாளர்கள் அமைச்சர்கள் மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் திட்டமிடாமல் நகரத்தை அமைக்காததால் தண்ணீர் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். முதல்வர் மழை பெய்தவுடன் தண்ணீரை வெளியேற்ற தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இரண்டு அமைச்சர்கள் அங்கு முகமூட்டுள்ளதாகவும் கூறுகிறார். தூத்துக்குடி தத்தளித்த போதும் ,சென்னை தத்தளித்த போதும் இதே பதிலைத்தான் அவர் கூறினார். மழை நீரை வெளியேற்றும் பணிகள் என்னமோ ஆமை வேகத்தில் தான் நடக்கிறது. மக்கள் அவதி என்னவோ தொடர்கிறது.

போர்க்களத்தில் பொறுமையுடன் சிரிக்கின்ற பொன் தமிழ் சங்கம் கண்ட மதுரை மண்டலம் இப்போது நீர்க்கோலம் பூண்டு, கோபத்தில் கொப்பளிக்கிறது.
வரலாற்று இல்லாத துயரம் மதுரை மக்களுக்கு வந்தது மழையை கணித்து திட்டமிடத் தெரியாததா.. இல்லை திட்டமிட்டு பணிகளை செய்யாததா என்பது அமைச்சர்களுக்கே வெளிச்சம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

  • mad 30 ஆண்டுகளுக்கு பின் தத்தளித்த தூங்கா நகரம் : தூங்கியது யார்?
  • Views: - 2

    0

    0

    மறுமொழி இடவும்