புகைகிறதா திமுக – சிபிஐஎம் கூட்டணி.. மீண்டும் சீண்டிய சு.வெ
Author: Hariharasudhan28 October 2024, 2:25 pm
மதுரை மழை பாதிப்பில் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க அரசுக்கு எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை: மதுரையில் கடந்த வாரம் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. அப்போது, நகரின் பல்வேறு இடங்களில் தேங்கிய மழைநீர் குடியிருப்புகளில் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர். குறிப்பாக, கூடல் நகர் உள்ளிட்ட பகுதிகள் பலத்த சேதத்தைச் சந்தித்தது.
இந்த நிலையில், மதுரை எம்பி சு.வெங்கடேசன், ”மதுரையில் இன்று (அக்.25) மாலை 3 மணி முதல் 3.15 வரையிலான 15 நிமிடத்தில் 4.5cm மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. காலை 8.30, மாலை 5.30 இடைப்பட்ட 9 மணி நேரத்தில் 9.8 cm மழை பொழிந்துள்ளது. பாதிப்பின் தீவிரத்தைத் தணிக்க போர்க்கால நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்” என தனது எக்ஸ் பக்கத்தில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி பதிவிட்டு இருந்தார்.
இது, ஆளும் திமுக அரசுக்கு எதிராக, அதன் உடன் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி கருத்து கூறியதாக அரசியல் மேடையில் சலசலப்புக்கு உள்ளானது. அதேநேரம், நல்ல முறையில் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு இருந்ததாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இன்று (அக்.28), “மதுரையில் இந்த அக்டோபர் மாதத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மதுரை நகரைப் பொறுத்தவரை, கடந்த 1955ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி 115 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதன் பின்னர், தற்போது 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அக்டோபர் மாதத்தில் 100 மிமீ-க்கு மேல் மழை பதிவாகியுள்ளது.
குறிப்பாக, கடந்த அக்டோபர் 13ஆம் தேதி மதுரையில் ஒரே நாளில் 110 மிமீ வரை மழை பதிவாகியிருந்தது. 1955ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே அதிகபட்ச மழையாகும். அக்டோபர் 12ஆம் தேதி காலை 8.30 மணி தொடங்கி 13ஆம் தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் மதுரையில் 16 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியது.
இந்த 16 செ.மீ. மழையில், குறிப்பாக, 12ஆம் தேதி இரவு 10 மணி முதல் 13ஆம் தேதி அதிகாலை 3.30 மணி வரையிலான 5.30 மணிநேரத்தில் மட்டும் 13 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியது. அக்டோபர் 25ஆம் தேதி மாலை 3 மணி முதல் 3.15 வரையிலான 15 நிமிடத்தில் 4.5 cm மழைப்பொழிவு பதிவாகியது.
காலை 8.30 – மாலை 5.30 இடைப்பட்ட 9மணி நேரத்தில் 9.8cm மழை பொழிந்துள்ளது. புவி வெப்பமயமாதலால் உந்தப்பட்ட காலநிலை மாற்றத்தால் குறுகிய காலத்தில் அதிகப்படியான பெருமழை பொழியும் என அறிவியலாளர்கள் கூறிவருவதற்கான எடுத்துக்காட்டாகும் இந்த நிகழ்வு.
இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தரவுகளின்படி, வடகிழக்குப் பருவமழை காலமான இந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் மதுரையில் மட்டும் பதிவான சராசரி மழையின் அளவு 308.6 மி.மீ. ஆகும். ஆனால், இதே காலத்தில் வழக்கமாகப் பதிவாகும் மழையின் அளவு 149.4 மி.மீ. மட்டுமே.
ஆகவே, அக்டோபர் மாதத்தின் முதல் 27 நாட்களில் மட்டும் மழைப்பொழிவு இயல்பைவிட 107% அதிகமாகப் பதிவாகியுள்ளது. ஏற்கெனவே மதுரையில் தென்மேற்குப் பருவ மழை வழக்கத்தைவிட 93 % அதிகமாகப் பெய்துள்ளது . வடகிழக்குப் பருவமழை காலத்தில் இயல்பைவிட அதிகமான மழைப்பொழிவு பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சிப் பகுதியில் அம்ருத் – குடிநீர் பணி, வடிகால், பாதாளச் சாக்கடை பணி மற்றும் சாலை பணிகள் இரண்டு முக்கிய மேம்பாலப் பணிகள் நடந்து வருவதால் மதுரை மக்கள் கடும் இடர்பாடுகளைச் சந்தித்தனர். பெருமழையின் காரணமாக மதுரை மாநகர வடக்குப் பகுதியில் ஏராளமான வீடுகளுக்குள் எதிர்பாராத மழைவெள்ளம் புகுந்து எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான அடிப்படைப் பொருட்களை இழந்துள்ளனர்.
பருவமழை காலத்து இடர்களைப் போக்க அரசு நிர்வாகம் முழுமையாகவும், ஆற்றலோடும் செயல்பட அனைத்துவித முயற்சிகளையும் உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிக அவசியம். மேலும் தற்போது உடைமைகளை இழந்து, பொருளாதார மற்றும் வருவாய் வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் குறித்த முழுமையான கணக்கெடுப்பினை மாநில அரசு நடத்திட வேண்டும்.
இதையும் படிங்க: உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் : விஜய்யை விமர்சித்த நடிகர்!
பண்டிக்கைக் காலம் உள்ளிட்ட சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் இழப்பீடாக குறைந்தபட்சம் ரூபாய் 25,000 வழங்க வேண்டுமென தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்து உள்ளார்.
அதற்கு முன்னதாக, எம்பி-யை கண்டா வரச்சொல்லுங்க என்றவாறு மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அது குறித்து பேசிய எம்பி சு.வெங்கடேசன், “ரேஷன் கடையில் தரமான பொருள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தால், ஒருவருக்கு கோபம் வருகிறது. அது யாராக இருக்கும்? தரம் இல்லாத, எடை குறைவான பொருளை வழங்க காரணமானவராக இருக்கக்கூடும். அதற்கு எங்களுக்குப் பதிலடி கொடுப்பதாக நினைத்து ‘எம்பியை கண்டா வரச் சொல்லுங்க’ என சுவரொட்டி ஒட்டினர் என சு.வெங்கடேசன் தெரிவித்தார்.