வெப்ப அலை வீச்சை மாநில பேரிடராக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாடு மாநில பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளின்படி, வெப்ப அலை பாதிப்புக்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும், உரிய நிவாரணங்கள் வழங்கவும், வெப்ப அலை வீச்சை மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதன்படி, வெப்ப அலையால் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்த அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூனில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், மாறி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக, தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலை வீச்சும் நிலவியது. வெப்ப அலையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க பொது இடங்களில் தண்ணீர் பந்தல் அமைப்பது, ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் வழங்குவது, திறந்தவெளியில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி பணி நேரத்தை மாற்றி அமைப்பது, வெப்ப அலை காரணமாக ஏற்படும் உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கேரளா கோயில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து; 150க்கும் மேற்பட்டோர் படுகாயம்!