சென்னைவாசிகளே.. பட்டாசு வெடிக்க என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?

Author: Hariharasudhan
29 October 2024, 7:14 pm

மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை: தித்திக்கும் தீபாவளி திருநாளுக்கு இன்னும் ஒரு நாளே உள்ளது. இந்த நிலையில், பட்டாசுகளை வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசால் தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காக்க பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சி முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்குமாறு தமிழக அரசு கோரியுள்ளது.

பட்டாசு குப்பைகளை மற்ற எந்த குப்பைகள் உடனும் கலக்காமல் தினம்தோறும் வகைப்படுத்திய குப்பையைப் பெற வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளரிடம் தனியாக ஒப்படைக்க வேண்டும். பெருநகர சென்னை மநகராட்சியில் கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் வெடிக்குப்பைகள் தனியாக சேகரிக்கப்பட்டு கும்மிடிபூண்டியில் உள்ள தொழிற்சாலை அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தும் செயலாக்க நிலையத்திற்கு (Resustainability IWM Solutions Limited (Tamilnadu Waste Management Limited) Facility, Gummidipoondi) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டியவை: அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

இதையும் படிங்க : ஓபிஎஸ்க்கு புது நெருக்கடி.. இனி மதுரை கோர்ட்டில் வாதம்.. ஐகோர்ட் உத்தரவு!

எனவே, பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 382

    0

    0