தீபாவளி கொண்டாட்டத்துல உங்க நுரையீரல் ஆரோக்கியத்த மறந்துடாதீங்க!!!
Author: Hemalatha Ramkumar30 October 2024, 5:16 pm
தீபாவளி கொண்டாட்டத்தில் கட்டாயமாக பட்டாசு இருக்கும். ஆனால் இந்த பட்டாசு வெடிக்கும் காரணத்தால் தீபாவளி சமயத்தில் காற்று அதிக மாசு நிறைந்ததாக மாறிவிடும். இதனால் பலருக்கு தொண்டை வலி, தொண்டையில் அரிப்பு, சுவாசிப்பதில் சிக்கல்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே இந்த நச்சு நிறைந்த காற்றில் இருந்து உங்களுடைய நுரையீரல்களையும், தொண்டையையும் பாதுகாப்பதற்கு நாம் ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். அவை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
சுவாச பயிற்சிகள்
சுவாசப் பயிற்சிகளை செய்வது உங்களுடைய நுரையீரலை வலுப்படுத்தி அதன் செயல்பாட்டை மேம்படுத்தும். இது நுரையீரலின் செயல்திறனை அதிகரிக்கும். இந்த பயிற்சிகளை உங்களுடைய அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக மோசமான, தரமற்ற காற்று உங்களுடைய சுவாச ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதை குறைக்கலாம்.
அதிக மாசுபாடு நிறைந்த சமயத்தில் வீட்டிற்குள்ளேயே இருக்கவும்
அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் காற்றின் தரம் மிக மோசமாக இருக்கும். எனவே இதிலிருந்து தப்பிப்பதற்கு மாசுபாடு அதிகம் இருக்கும் சமயத்தில் வீட்டிற்குள்ளேயே இருப்பது நல்லது. மேலும் வெளிப்புற காற்று வீட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்கு கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வையுங்கள்.
இதையும் படிக்கலாமே: உடல் வலிய சாதாரணமா நினைக்காதீங்க… பெண்களுக்கு ஏற்படும் ஹார்ட் அட்டாக் அறிகுறிகள்!!!
வெளியே செல்லும்போது மாஸ்க் அணியவும்
வீட்டை விட்டு எப்போது வெளியே சென்றாலும் கட்டாயமாக மாஸ்க் அணிந்து கொள்ள மறக்காதீர்கள். மெல்லிய துகள்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை வடிகட்டும் தரமான மாஸ்கை பயன்படுத்துங்கள். நீங்கள் வாங்கும் மாஸ்க் உங்களுடைய முகத்தை சரியாக பொருந்தி இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.
போதுமான தண்ணீர்
தினமும் போதுமான தண்ணீர் குடிப்பது உங்கள் தொண்டை மற்றும் நுரையீரல் ஆரோக்கியம் உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்கு போதுமான தண்ணீர் இருக்க வேண்டும். ஹெர்பல் டீ, சூப், எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிப்பது போன்றவை நாள் முழுவதும் உங்களுக்கு தேவையான நீர்ச்சத்தை அளிக்கும்.
ஆரோக்கியமான உணவு
ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த உணவு நுரையீரல் ஆரோக்கியத்திற்கு ஆதரவளித்து மாசுபாட்டின் விளைவுகளை எதிர்த்து போராடுவதற்கு உதவுகிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிடுங்கள். குறிப்பாக வைட்டமின்கள் C மற்றும் E அதிகம் உள்ள ஆரஞ்சுகள் ,பெர்ரி, கீரை மற்றும் நட்ஸ் போன்றவற்றை சாப்பிடவும். மேலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் மற்றும் ஆளி விதைகள் வீக்கத்தை குறைக்க உதவும்.
ஏர் பியூரிஃபையர் பயன்படுத்தவும்
நல்ல தரமான ஏர் பியூரிஃபையர் வாங்கி வைப்பதன் மூலமாக வீட்டிற்குள் இருக்கும் காற்றின் தரத்தை மேம்படுத்தலாம். HEPA ஃபில்டர்கள் அடங்கிய ஏர் பியூரிஃபையர்களை வாங்குங்கள். உங்களுடைய பெட்ரூம், ஹால் அல்லது அலுவலகத்தில் ஏர் பியூரிஃபையரை வைப்பது நீங்கள் சுவாசிக்கும் காற்றில் உள்ள நச்சுக்களை அகற்றி உங்களுக்கு தூய்மையான காற்று கிடைப்பதை உறுதி செய்யும்.