மாவட்டச் செயலாளர்கள் அதிரடி நீக்கமா? அதிமுக முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி பதில்!

Author: Hariharasudhan
1 November 2024, 6:30 pm

ஜெயலலிதாவை விட, எடப்பாடி பழனிசாமி நன்றாகவே நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

மதுரை: வருடந்தோறும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் குரு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு, அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2014ஆம் ஆண்டு 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான 13.5 கிலோ எடை கொண்ட தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த கவசம், மதுரை அண்ணா நகர் பாங்க் ஆப் இந்தியா பெட்டகத்தில் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை ஒட்டி, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிப்பதற்காக, அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் வங்கிக்கு நேரில் வந்து கையெழுத்திட்டு, அக்டோபர் 25ஆம் தேதி தங்கக் கவசத்தை பெற்றுச் சென்றனர்.

இதனையடுத்து, நேற்றைய முன்தினம் தேவர் ஜெயந்தி நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிடோர் வந்து மரியாதை செலுத்தினர். இவ்வாறு தேவர் ஜெயந்தி நடைபெற்று முடிந்த நிலையில், அதனை மீண்டும் வங்கியில் இன்று (நவ.1) ஒப்படைத்தனர். இந்த நிகழ்வின் போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், உள்ளிட்டோர் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெற்று முடிந்தாலும் கூட, அது குறித்து நோ கமெண்ட்ஸ் தான். இப்போதுதான் அறிமுகம் ஆகி உள்ளார், எனவே பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார். பின்னர், நவம்பர் 6 அன்று நடைபெற உள்ள அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் சிலர் நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், “அதிமுகவைப் பொறுத்தவரை அனைத்து மாவட்டச் செயலாளர்களும் நன்றாகவே பணிபுரிகின்றனர். எனவே, அவர்கள் குறித்து நடவடிக்கை என்பதற்கெல்லாம் இடமே இல்லை” என்றார். தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்று எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகளை விட, தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கைகளை நன்றாகவே மேற்கொண்டு தான் வருகிறார்” எனப் பதிலளித்தார்.

இதையும் படிங்க : ஒரே மாதத்தில் 2வது முறையாக பொதிகை ரயிலை கவிழ்க்க சதியா? உண்மை என்ன?

தொடர்ந்து, நவம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் நிறைவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பொதுச் செயலாளர் அறிவிப்பார் எனத் தெரிவித்த திண்டுக்கல் சீனிவாசன், அந்த கூட்டத்திற்கு முன்பு யூகத்தின் அடிப்படையில் நாம் பேச முடியாது எனக் கூறினார். மேலும், நவம்பர் 6 அன்று நடைபெற உள்ள அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 306

    0

    0