முறிந்ததா அண்ணன் – தம்பி உறவு? விஜயை வெளுத்து வாங்கிய சீமான்!
Author: Hariharasudhan2 November 2024, 11:22 am
எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரிதான் எனக் கூறிய சீமான், அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது என காட்டமாக விமர்சித்துள்ளார்.
சென்னை: மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நேற்று (நவ.1) தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், சென்னையில், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
தொடர்ந்து மேடையில் பேசிய சீமான், “திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று என்கிறார். ஒன்று ஆற்றில் கால் வைக்க வேண்டும், இல்லையென்றால் சேற்றில் கால் வைக்க வேண்டும். இது என்ன இரண்டிலும் ஒவ்வொரு கால் வைப்பது? திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ?” என தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்தார்.
மேலும் பேசிய சீமான், “அண்மையில் வந்த படத்தில் (கோட்) வில்லனாகவும், கதாநாயகனாகவும் அவரே நடித்ததால் குழம்பிவிட்டார் என நினைக்கிறேன். நீங்கள் சொல்வது கொள்கையே இல்லை. வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ.. ஒரு சாலையில் இடப்பக்கம் நிற்க வேண்டும் அல்லது வலப்பக்கம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி மோதிவிடும்” என்றார்.
தொடர்ந்து, “ நான் குட்டிக்கதை சொல்பவன் அல்ல தம்பி. வரலாற்றைக் கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல் தான் பெரியார், அம்பேத்கர் எல்லாம் படிக்க வேண்டும். நாங்கள் படித்து, அதில் பி.எச்டியே வாங்கிவிட்டோம். சினிமாவில் பேசும் பஞ்ச் டயலாக் இது இல்லை தம்பி, இது நெஞ்சு டயலாக்” என விஜயை தாக்கிப் பேசினார் சீமான்.
இதனால் எழுந்த கடும் ஆரவாரத்துக்கு இடையே பேசிய சீமான் “எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரிதான். அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது. இந்த பூச்சாண்டி எல்லாம் என்னிடம் காட்ட வேண்டாம். 2026ஆம் ஆண்டு என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது” என்றார்.
இதையும் படிங்க: விஜய் ஆரம்பிக்கும் புதிய டிவி சேனல்… என்ன பெயர் தெரியுமா?
முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பேசிய அதன் தலைவர் விஜய், “திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் நாம் பிரித்து பார்க்கப் போவது இல்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள் என்பது தான் நம்முடைய கருத்து” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், விஜய் மாநாட்டுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “விஜயின் கொள்கை ஆயிரம் இருக்கட்டும். அவரின் கொடி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆயிரம் தான் இருந்தாலும் அவர் என் தம்பி. என்னை எதிர்த்தே வேலை செய்தாலும் நான் அவரை ஆதரிப்பேன்” எனக் கூறியிருந்தார்.