17 வயது சிறுவன் மீது வீடு புகுந்து கொலைவெறித் தாக்குதல்.. நெல்லையில் பயங்கரம்!
Author: Hariharasudhan5 November 2024, 12:51 pm
நெல்லையில் 17 வயது சிறுவனை வீடு புகுந்து வெட்டிய சம்பவம் குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், மேலப்பாட்டம் கிராமத்தில் வசித்து வருபவர் 17 வயது சிறுவன். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்த நிலையில், அவர் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அதிவேகத்தில் வந்த கார் ஒன்று சிறுவன் மீது மோதுவது போல் வந்து உள்ளது. இதிலிருந்து தப்பித்த அச்சிறுவன், அந்தக் காரை ஓட்டி வந்த நபரிடம், ஏன் காரை வேகமாக ஓட்டி வந்தீர்கள் என கேட்டு உள்ளார். பின்னர் இது வாய்த்தகராறாக மாறி உள்ளது.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்து உள்ளனர். இருப்பினும், ஆத்திரம் அடையாத காரில் இருந்த நபர்கள், சிறுவனின் வீட்டிற்கேச் சென்று அவரை அரிவாளால் கொடூரமான முறையில் தாக்கி உள்ளனர். அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதனையடுத்து, தாக்குதலுக்கு உள்ளான சிறுவனின் தாயார் பாளையங்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில், பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 7 வயது மகனுக்கு நேர்ந்த கொடுமை.. லாட்ஜில் அறை எடுத்து பெற்றோர் விபரீதம்!
மேலும், முதற்கட்டமாக இந்தச் சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம், தாக்கப்பட்ட சிறுவன், பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இச்சம்பவத்தைக் கண்டித்து மேலப்பாட்டம் கிராமத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.