இந்துக் கோயில் மீது அதிபயங்கர தாக்குதல்.. மோடி தடாலடி பதில்!
Author: Hariharasudhan5 நவம்பர் 2024, 1:41 மணி
கனடாவில் இந்துக் கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், கோழைத்தனமான முயற்சி என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
டெல்லி: சமீப காலமாக, இந்தியா – கனடா நல்லுறவு இடையே விரிசல் ஏற்பட்டு வருகிறது. இது ஆறிவரும் எனக் கருதிய நிலையில், தூதகர்கள் வெளியேற்றம், இந்துக் கோயில் மீது சேதம் என அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறி, இரண்டு நாடுகளும் தற்போது எதிரெதிர் திசையில் பயணித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது மீண்டும் இந்துக் கோயில் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு சர்வதேச அளவில் அரசியல் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
இதன்படி, கனடாவின் டொராண்டோ மாகாணத்துக்கு உட்பட்ட பிராம்ப்டன் என்ற பகுதியில் உள்ள இந்து சபா கோயில் மீது காலிஸ்தான் தீவிரவாதக் குழுவினர் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலின் போது, கோயிலில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட பக்தர்கள் மீதும் காலிஸ்தான் தீவிரவாதக் குழுவினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதற்கு காரணமாக, கனடாவில் உள்ள தூதரக முகாமுக்கு இந்திய அதிகாரிகள் வந்ததற்கு கண்டனம் தெரிவித்து, இந்தப் போராட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், “பிராம்ப்டனில் உள்ள இந்துக் கோயிலில் அரங்கேறிய வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஒவ்வொரு கனடா மக்களும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் கடைபிடிக்க உரிமை உண்டு. மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “கனடாவில் இந்துக் கோயில் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோல், நமது தூதரக அதிகாரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது. இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் என எதிர்பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: உள்துறை அமைச்சர் பதவியும் எனக்குத்தான்.. முதலமைச்சரை எச்சரிக்கும் துணை முதலமைச்சர்!
மேலும், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசு மீது குற்றம் சுமத்திய கனடா அரசு, கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா உள்ளிட்ட 6 இந்திய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. இதற்கு அடுத்தபடியாக, இந்தியாவில் பணியாற்றிய 6 கனடா தூதரக அதிகாரிகளை இந்திய அரசு வெளியேற்றி உள்ளது. இவ்வாறு இந்தியா – கனடா உறவு தொடர்ந்து எதிரெதிராகவே அமைந்து வருகிறது.
0
0