மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா? 2 மாதங்களில் தொடர் சம்பவங்கள்!
Author: Hariharasudhan6 நவம்பர் 2024, 2:20 மணி
மங்களூரு எக்ஸ்பிரஸ் சென்ற அம்பத்தூர் அடுத்து தண்டவாளத்தில் கிடந்த சிமெண்ட் செங்கல் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மங்களூருக்கு செல்லும் விரைவு ரயில் ஒன்று நேற்று முன்தினம் (நவ.4) இரவு புறப்பட்டு உள்ளது. பின்னர், இந்த ரயில் அம்பத்தூர் ரயில் நிலையத்தைக் கடந்தபோது, அம்பத்தூர் – திருமுல்லைவாயில் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் பெரிய சிமெண்ட் கலந்த செங்கல் வைக்கப்பட்டிருந்ததை ரயில் லோகோ பைலட் பார்த்து உள்ளார்.
இதனையடுத்து, அவர் உடனடியாக இது குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்து உள்ளார். பின்னர், அங்கு இருந்து ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் பேரில், ஆவடி ரயில்வே போலீசார் சென்று, தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 3 கிலோ எடை கொண்ட சிமென்ட் செங்கலை தண்டவாளத்தில் இருந்து அகற்றி உள்ளனர்.
இதனையடுத்து, அன்று இரவு முதல் நேற்று காலையும் சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீசார், தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், லோகோ பைலட் அளித்த தகவலின் அடிப்படையில், இது குறித்து ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்த சிமெண்ட் செங்கலை ரயில்வே தண்டவாளத்தில் வைத்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், விரைவு ரயில் பாதையில் சிமெண்ட் கல்லை வைத்து, ரயிலை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, கடந்த நவம்பர் 1ஆம் தேதி மாலை, தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருந்து பொதிகை விரைவு ரயில் வழக்கம்போல் புறப்பட்டது. இதனையடுத்து, அந்த ரயில் கடையநல்லூர் வழியாக சென்று கொண்டிருந்த பொழுது, ரயில் தண்டவாளத்தின் மீது 10 கிலோ எடை கொண்ட பெரிய கல் வைக்கப்பட்டதை லோகோ பைலட் பார்த்துள்ளார். பின்னர், அவர் அளித்த தகவலின் பேரில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர்.
மேலும், செப்டம்பர் 26ஆம் தேதி இதே பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டையில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்தபோது, கடையநல்லூர் – பாம்பகோவில்சந்தை ரயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாளத்தில் இருந்த கல் மீது மோதி என்ஜினின் முன்பக்க தகடு சேதம் அடைந்தது. பின்னர், இது தொடர்பாக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து அருகில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வந்த இருவரைக் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தெலுங்கானாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு.. எப்போது முடியும்?
0
0