கேப்டன் மகனுக்கு புது பதவி.. புதிர் போட்ட பிரேமலதா விஜயகாந்த்!
Author: Hariharasudhan10 November 2024, 4:51 pm
விஜய பிரபாகரனுக்கு பதவி வழங்குவது குறித்து தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், இன்று (நவ.10) தேமுதிகவின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி தலைமை அலுவலகம் உள்ள சென்னை கோயம்பேட்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆண்டுதோறும் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவு தினம் அன்று அஞ்சலி செலுத்துதல், பூரண மதுவிலக்கு, சொத்துவரி உயர்வுக்கு கண்டனம் என 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்திடம், விஜய பிரபாகரனுக்கு கட்சியில் பதவி வழங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அவர், “விஜய பிரபாகரனுக்கு கட்சியில் பதவி அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
அவருக்கு கட்சியில் பதவி கொடுப்பது தொடர்பாக செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். மேலும், செயற்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு மட்டும் அல்லாமல், இன்னும் பலருக்கும் பொறுப்பு வழங்கப்பட உள்ளது” எனக் கூறினார்.
மேலும், 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி என மீண்டும் பிரேமலதா விஜயகாந்த் உறுதிபட தெரிவித்தார். முன்னதாக, நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் விஜய பிரபாகரன் களமிறக்கப்பட்டார்.
இதையும் படிங்க: கொதித்தெழுந்த விஜயபாஸ்கர்.. தென்காசி அரசு மருத்துவமனையின் அவலம்!
இதன் முடிவில், மிகவும் கணிசமான வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். ஆனால் கடும் போட்டியாளராக விஜய பிரபாகரன் இருந்ததால், காங்கிரஸ் மற்றும் திமுக தலைமை மிக நுண்ணிப்பாக கவனிக்க வேண்டிய தொகுதியாக விருதுநகர் தொகுதி மாறியது. மேலும், மாணிக்கம் தாகூரின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கும் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0