குழந்தைகள திட்டாம அடிக்காம நம்ம வழிக்கு கொண்டு வர உதவும் சூப்பர் டிப்ஸ்!!!
Author: Hemalatha Ramkumar11 November 2024, 4:26 pm
குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதில் பல்வேறு சவாலான தருணங்கள் அடங்கி இருக்கும். அதிலும் குறிப்பாக குழந்தைகள் நம்முடைய பேச்சை கேட்காமல் தவறாக நடந்து கொள்ளும் பொழுது அவர்களை திருத்துவது என்பது சிக்கலான ஒரு செயல். குழந்தைகளை திட்டாமல் அடிக்காமல் அவர்களை எப்படி நல்வழிப்படுத்துவது என்று என்பது பல பெற்றோர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மையில் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்கு அவர்களை அடிக்கவோ திட்டவோ தேவையில்லை. அதற்காக இருக்கக்கூடிய சில யுக்திகளை பின்பற்றினாலே போதும். அவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்கள் குழந்தையிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை ஆரம்பத்திலேயே அவர்களிடம் சொல்லி விடுவது அவர்கள் தவறான செயல்களில் ஈடுபடுவதை குறைக்கும். எளிமையான மொழியில் அவர்களுக்கான விதிகளை விளக்குங்கள். தேவைப்பட்டால் அடிக்கடி அதனை சொல்லிக் கொண்டே இருங்கள். உதாரணமாக விளையாடிய பிறகு பொம்மைகளை பெட்டியில் மீண்டும் எடுத்து வைப்பது அல்லது வீட்டுக்கு வந்த உடன் அதனை தெரிவிப்பது போன்ற எந்த மாதிரியான விதியாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அவர்களுக்கு புரியும்படி அதனை எடுத்துச் சொல்லுங்கள்.
அவர்கள் என்ன செய்யக்கூடாது என்பதில் கவனம் செலுத்துவதை விட அவர்கள் செய்யும் சரியான விஷயங்களை கவனித்து அதற்கான சன்மானங்களை வழங்குங்கள். அவர்கள் நன்னடத்தையில் ஈடுபடும் பொழுது அவர்களை வார்த்தைகள் மூலமாக பாராட்டுவது, கட்டி அணைப்பது அல்லது ஸ்டிக்கர்கள் போன்றவற்றை கொடுப்பது அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். உதாரணமாக அவர்களுடைய பொம்மைகளை அருகில் இருக்கும் குழந்தைகளுடன் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் பொழுது அதற்கு நீங்கள் அவர்களை பாராட்ட வேண்டும்.
உங்கள் குழந்தையுடன் போதுமான நேரத்தை செலவு செய்வது மிகவும் அவசியம். இல்லை என்றால் அவர்கள் தனிமையில் இருப்பதாக உணர்வார்கள். உங்கள் பிள்ளையோடு ஒன்றாக அமர்ந்து அவர்கள் செய்யும் சில விஷயங்கள் ஏன் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதை அவர்களுடன் பேசுங்கள். பொதுவாக குழந்தைகள் கட்டுப்பாட்டை இழந்த ஒரு உணர்வை பெற்றால் தான் தவறாக நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு எளிமையான வேலைகளை தருவது அல்லது ஆப்ஷன்களை வழங்குவது அவர்களை முன்னிலைப்படுத்தி காட்டும். உதாரணமாக “உன்னுடைய ஷூவை மாட்டிக்கொள்” என்று சொல்வதற்கு பதிலாக “இன்று நீ சிவப்பு நிற ஷூ அணியப் போகிறாயா அல்லது நீல நிற ஷூ அணிய போகிறாயா?” என்று கேளுங்கள்.
இதையும் படிக்கலாமே: குளிர் காலத்தில் நம்மை தாக்க தயாராக இருக்கும் உடல்நலப் பிரச்சினைகள்… எச்சரிக்கையா இருக்க என்ன செய்யணும்!!!
கடினமான சூழ்நிலைகளில் கூட உணர்வுகளை பொறுமையாகவும் அதே நேரத்தில் மரியாதையாகவும் எப்படி கையாள வேண்டும் என்பதை அவர்களுக்கு காட்டுங்கள்.
உங்களுடைய குழந்தை ‘ப்ளீஸ்’ மற்றும் ‘தேங்க் யு’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் அவற்றை நீங்கள் முதலில் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.
எந்த ஒரு விஷயத்திற்கும் முதலில் உங்களுடைய ரியாக்ஷனை காட்டுவதற்கு முன்பு ஆழமான ஒரு சுவாசம் எடுத்து உங்கள் குழந்தை அதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். எந்த ஒரு முடிவுக்கும் வருவதற்கு முன்பு அவர்களுடைய தரப்பை நீங்கள் கேட்க வேண்டும். அவர்கள் மீது உங்களுக்கு அக்கறை இருப்பதையும், அவர்களுடைய உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் நீங்கள் அவர்களுக்கு உதவுவீர்கள் என்பதையும் அவர்களுக்கு சொல்லுங்கள்.
உங்கள் குழந்தைகள் என்ன செய்யக்கூடாது என்பதை வெறுமனே சொல்வதற்கு பதிலாக அதற்கான தீர்வை கண்டுபிடிப்பதற்கு அவர்களுக்கு உதவுங்கள். உதாரணமாக ஒருவேளை உங்கள் குழந்தை அவருடைய நண்பரின் வீட்டிலிருந்து ஏதாவது ஒரு பொம்மையை எடுத்து வந்து விட்டால் இவ்வாறு செய்வது சரியா, இதனை சரி செய்வதற்கு நாம் என்ன செய்யலாம் என்பதை அவர்களிடம் கேளுங்கள். இவ்வாறு நீங்கள் செய்வது அவர்களுடைய தன்னம்பிக்கையை அதிகரித்து, பிரச்சினைகளை எப்படி தீர்ப்பது என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க உதவும்.