இரவு நேரத்தில் ரத்த சர்க்கரை அளவுகள் குறையாமல் இருக்க இந்த குறிப்புகளை பின்பற்றினாலே போதும்!!!
Author: Hemalatha Ramkumar12 November 2024, 7:08 pm
டயாபடீஸ் பிரச்சனையுடன் வாழ்வது அவ்வளவு எளிதல்ல. இந்தியாவில் தொடர்ந்து டயாபடீஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நபர்கள் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிப்பதை பற்றி பேசும்பொழுது, குளுக்கோஸ் அளவுகள் குறைந்தால் என்ன ஆகும் என்பது பற்றியும் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். சர்க்கரை அளவுகளில் கூடுதல் கவனம் செலுத்துவது டயாபடீஸ் பிரச்சனையை பராமரிப்பதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக காலை நேரத்தில் பலர் குறைவான இரத்த சர்க்கரையை அனுபவிக்கலாம். இது ஹைபோகிளைசிமியா என்று அழைக்கப்படுகிறது. இரவு முழுவதும் பட்டினியாக இருந்ததாலும் இன்சுலின் விளைவாலும் இது ஏற்படுகிறது. எனவே காலை நேரத்தில் குறைந்த இரத்த சர்க்கரையை தவிர்ப்பதற்கு உதவும் சில குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.
மாலை நேர ஸ்நாக்ஸ் ஆரோக்கியமான அதே நேரத்தில் சரிவிகித தின்பண்டங்களை சாப்பிடுவது இரவு முழுவதும் உங்களுடைய இரத்த சர்க்கரையை சீராக வைப்பதற்கு உதவும். நீங்கள் சாப்பிடும் தின்பண்டங்களில் கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இருக்க வேண்டும். இவை அனைத்துமே உங்களுடைய குளுக்கோஸ் பொறுமையாக உறிஞ்சப்படுவதை உறுதி செய்து இரவு முழுவதும் உங்களுக்கு சீரான ஆற்றல் கிடைப்பதற்கு உதவும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
உங்களுடைய மாலை நேர உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இரவு முழுவதும் சீரான ரத்த அளவுகளை பராமரிப்பதற்கு உதவும். முழு தானியங்கள், பீன்ஸ் வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கி, கார்போஹைட்ரேட்டுகள் பொறுமையாக உறிஞ்சப்படுவதை உறுதி செய்யும். இதனால் ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் பொறுமையாக வெளியிடப்படும். இதனால் நீங்கள் தூங்கும் பொழுது உங்களுடைய ரத்த சர்க்கரை அளவு திடீரென்று குறையாது.
தண்ணீர்
நீர்ச்சத்து இழப்பு காரணமாகவும் ரத்த சர்க்கரை அளவுகள் பாதிக்கப்படலாம். எனவே நாள் முழுவதும் மற்றும் இரவு தூங்க செல்லும் பொழுது நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீர் பருகுவது நம்முடைய ரத்த சர்க்கரை அளவுகளை சீராக பராமரிக்கும்.
இதையும் படிக்கலாமே: இதயத்தை ஆரோக்கியமாக வைக்க எந்தெந்த சமையல் எண்ணெய்களை பயன்படுத்தலாம்…???
மதுபானம்
மதுபானங்கள் பருகுவது அதிலும் குறிப்பாக வெறும் வயிற்றில் பருகுவது ரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தலாம். மதுபானங்கள் குளுக்கோனியோஜெனிசிஸ் செயல்முறையை தடுக்கும் திறன் கொண்டது. அதாவது கல்லீரல் குளுக்கோசை உற்பத்தி செய்யும் செயல்முறை குளுக்கோனியோஜெனிசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் ஹைபோகிளைசிமியா ஏற்படலாம்.
ரத்த சர்க்கரையை கண்காணிப்பது
படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ரத்த சர்க்கரை அளவை தினமும் கண்காணிப்பது ஹைபோகிளைசிமியா பிரச்சனை ஏற்படுவதை தடுக்க உதவும். ஒரு வேலை உங்களுடைய அளவுகள் குறைவாக இருந்தால் சர்க்கரை அளவை மீண்டும் பாதுகாப்பான அளவுக்கு கொண்டு வருவதற்கு ஒரு சிறிய அளவு தின்பண்டத்தை நீங்கள் சாப்பிடலாம்.
மருந்துகள்
அடிக்கடி காலை நேரங்களில் உங்களுடைய ரத்த சர்க்கரை அளவு குறைவாக இருப்பதை நீங்கள் கவனித்தால் அதற்கேற்ற மருந்துகளை சாப்பிடுவதற்கு நீங்கள் கட்டாயமாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். உங்களுடைய உணவு சாப்பிடும் பழக்க வழக்கங்கள் மற்றும் உடல் செயல்பாடுகளின் அடிப்படையில் அதற்கு மருந்து சாப்பிடுவதற்கான நேரத்தையும் அளவையும் அவர் உங்களுக்கு பரிந்துரைப்பார்.