புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பது சரியா…???
Author: Hemalatha Ramkumar16 November 2024, 7:42 pm
கண்களில் பிரகாசத்துடன் ரோஜா பூக்களை விட மென்மையான சருமத்தோடு அந்த குட்டி கைகளையும், கால்களையும் உதைத்து கொண்டிருக்கும் கைக்குழந்தையை பார்ப்பதற்கு தவம் தான் புரிய வேண்டும். ஒரு குழந்தையை பார்த்த உடனேயே அதனை கட்டி அணைத்து முத்தமிட வேண்டும் என்று பார்க்கும் அனைவருக்கும் ஆசையாக இருக்கும். ஆனால் அவ்வாறு பிறந்த குழந்தையின் முகம் அல்லது உதடுகளில் முத்தம் கொடுப்பது குழந்தைக்கு ஏதேனும் பிரச்சனையை ஏற்படுத்துமா என்பதையும் நாம் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
குழந்தைக்கு முத்தம் கொடுப்பது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். அதிலும் குறிப்பாக உதடுகளில் முத்தம் கொடுப்பதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு அமைப்பு என்பது வளர்ச்சி நிலையில் தான் இருக்கும். இதனால் அவர்கள் எளிதாக நோய் தொற்றுகளுக்கு ஆளாகலாம். கூடுதலாக அவர்கள் அனைத்து விதமான தடுப்பூசிகளையும் தற்போது பெற்றிருக்க மாட்டார்கள். இதன் காரணமாகவும் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
கைக்குழந்தைகளுக்கு முத்தமிடுவதற்கு முன்பு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
பொதுவாக குழந்தைகளின் முகம் அல்லது உதடுகளில் முத்தம் கொடுக்கும் பொழுது அதனால் அவர்களுக்கு காய்ச்சல், சளி, கோவிட்-19 மற்றும் பிற சுவாச சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒருவேளை நீங்கள் ஹெப்பாடிடிஸ்-B ஆல் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுடைய எச்சில் மூலமாக குழந்தைக்கு அது பரவுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.
குழந்தைகளின் உடல் பாகங்களில் முத்தம் கொடுப்பது பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும அதன் மூலமாகவும் ஒரு சில வைரஸ்கள் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இதையும் படிக்கலாமே: அடுத்தமுறை தலைக்கு குளிக்கும்போது இத யூஸ் பண்ணி பாருங்க… வெல்வெட் துணிய விட கூந்தல் சாஃப்டா இருக்கேன்னு கேட்பாங்க!!!
அப்படி என்றால் பிறந்த குழந்தைக்கு முத்தம் கொடுக்கக் கூடாதா?
எந்த வயதாக இருந்தாலும் சரி குழந்தைக்கு உதடுகளில் முத்தம் கொடுப்பது பாதுகாப்பில்லாதது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அதனால் பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு அவ்வாறு செய்வதை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற எந்த ஒரு அறிகுறிகளும் இல்லாவிட்டால் உங்களுடைய அன்பை வெளிப்படுத்துவதற்கு குழந்தைகளின் நெற்றி அல்லது பிற உடல் பாகங்களில் முத்தமிடலாம். எனினும் உங்களுக்கு வேறு ஏதேனும் தொற்று இருக்கும் பட்சத்தில் குழந்தையிடம் நெருங்கி செல்வதை தவிர்ப்பது புத்திசாலித்தனம். மேலும் உங்களுடைய கை சுகாதாரத்தை கூடுதல் கவனத்தோடு பார்த்துக் கொள்ளுங்கள்.
அட்டவணையின் படி, உங்களுடைய குழந்தைக்கு அவ்வப்போது தேவையான தடுப்பூசிகளை போடுவதற்கு மறக்காதீர்கள். குழந்தையின் சருமம் மிகவும் சென்சிட்டிவாக இருக்கும். எனவே உங்களுடைய லிப்ஸ்டிக் அல்லது லிப் கிளாஸ் போன்றவற்றில் உள்ள கெமிக்கல்கள் குழந்தையின் சருமத்தில் எரிச்சல் மற்றும் தடிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே உங்கள் குழந்தைக்கு முத்தமிடும் பொழுது நீங்கள் எந்த விதமான லிப்ஸ்டிக், கிளாஸ் அல்லது கிரீம் பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
0
0